காணாமல் போன கடல்!...


காணாமல் போன கடல்!...
x

இப்படியும் நடக்குமா?... இது சாத்தியமா?... என்று நினைத்ததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

''ஐயோ! என் கிணத்த காணோம்! கிணத்த காணோம்!'' என்று அலறியபடி. வடிவேலு போலீஸ் நிலையத்துக்கு ஓடிவருவார்.

- இது ஒரு படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சி.

கிணறு மட்டுமா காணாமல் போகிறது? வாய்க்கால், ஏரி, குளங்கள், ஆறுகள் கூடத்தான் காணாமல் போகின்றன... அவ்வளவு ஏன்?... ' கேக்' வெட்டுவது போல் மலையையே வெட்டி எடுத்து விற்று காசாக்கிவிடுகிறார்கள்.

இதெல்லாம் சாதாரணம்... சொன்னால் நம்பமாட்டீர்கள்!... ஒரு கடலே காணாமல் போய் இருக்கிறது. ஆம்... உண்மைதான் ஒரு கடலின் பெரும்பகுதி காணாமல் போய்விட்டது. தொடர்ந்து அந்த கடல் மாயமாகிக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் எப்படி?... சாத்தியமா?... ஆம்; சாத்தியம்தான்...

ஆர்ட்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், தென் பெருங்கடல் என 5 பெருங்கடல்கள் இந்த பூமியை சூழ்ந்துள்ளன. இதுதவிர மத்திய தரைக்கடல், கரீபியன் கடல், தென்சீன கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல் என மேலும் பல கடல்கள் உள்ளன.

இந்த கடல்களெல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாடுகளின் எல்லைகளை அடையாளப்படுத்துதல், கப்பல் போக்குவரத்து, நேர நிர்ணயம் போன்றவற்றின் வசதிக்காக இவை தனித்தனி பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இதுதவிர முற்றிலும் நிலப்பகுதியால் சூழப்பட்ட காஸ்பியன் கடல், சாக்கடல், ஆரல் கடல் உள்ளிட்ட மேலும் 44 சிறிய கடல்களும் உள்ளன. நிலத்தால் சூழப்பட்ட கடல்களில் காஸ்பியன் கடல்தான் மிகவும் பெரியது.

ஆசியா-ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே அஜர்பைஜான், ஈரான், கஜகஸ்தான், ரஷியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள இந்த கடல் 3 லட்சத்து 72 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. அதாவது ஜெர்மனி நாட்டை விட காஸ்பியன் கடல் அளவில் பெரியது. ரஷியாவில் உற்பத்தியாகும் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய நதியான வோல்கா இந்த கடலில்தான் கலக்கிறது.

காஸ்பியன் கடலை போன்ற ஒரு கடல்தான் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த கடலின் பெயர் ஆரல் கடல். மத்திய ஆசியாவில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது தமிழ்நாட்டின் பரப்பளவில் (1,30,058 ச.கி.மீ.) பாதிக்கும் மேல்; அதேசமயம் இலங்கையின் பரப்பளவை (65,610 ச.கி.மீ.) விட பெரியது.

இந்த கடல் அதிகபட்சமாக 42 மீட்டர் ஆழம் கொண்டது. தென் பகுதியை விட வட பகுதியில் ஆழம் அதிகம்.

இதை உலகின் 4-வது பெரிய ஏரி என்றும் சொல்வார்கள். அப்படி சொன்னாலும் இது கடல்தான். ஏனெனில் தண்ணீர் உப்பாகத்தான் இருக்கும். இந்த ஆரல் கடலில் சிறியதும் பெரியதுமாக சுமார் 1,100 தீவுகள் இருந்தன. கடலின் வட பகுதி கஜகஸ்தான் நாட்டிலும், தென் பகுதி உஸ்பெகிஸ்தானிலும் உள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, 1960-ல் 68 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவில் இருந்த ஆரல் கடல் வெகுவாக சுருங்கி தற்போது பத்தில் ஒரு பங்கு அளவுக்குத்தான், அதாவது சுமார் 7 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவுதான் உள்ளது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால் கிட்டத்தட்ட கடல் காணாமல் போய்விட்டது.

ஏரி, குளங்களைப் போல் இந்த கடலும் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறியதா? என்றால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் என்னதான் நடந்தது என்று பார்த்தால், அதன் பின்னணியில் ரஷியா உள்ளிட்ட சில நாடுகளின் சுயநலம் இருப்பது அம்பலமானது.

ஆப்கானிஸ்தானின் பாமிர் மலையில் உற்பத்தியாகும் ஆமுதாரியா, கிர்கிஸ்தானில் உற்பத்தியாகும் சிர்தாரியா, ரஷியாவில் உற்பத்தியாகும் ஊரல் ஆறுகளும் மற்றும் அருகில் உள்ள நாடுகளில் உற்பத்தியாகும் ஆறுகளும் இந்த கடலில்தான் கலக்கும்.

இந்த ஆறுகளின் வடிநிலப்பகுதிகள் ரஷியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் சில பகுதிகளிலும் அமைந்துள்ளன.

சிர்தாரியா கடலில் கலக்கும் இடத்தில் போர்ட் ஆரல்ஸ்க் என்ற இடத்தில் ரஷியா 1847-ல் தனது கடற்படை தளத்தை நிறுவியது. இந்த கடலின் வட பகுதியில் கஜகஸ்தானில் உள்ள ஆரல்ஸ்க் துறைமுகமும், தெற்கில் உஸ்பெகிஸ்தானில் உள்ள மினாக் துறைமுகமும் கடல்வழி சரக்கு போக்குவரத்தில் சிறந்து விளங்கின.

உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளெல்லாம் முன்பு சோவியத் யூனியன் எனப்படும் ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த நாடுகள்தான். 1980-களுக்கு பிறகுதான் அவை சோவியத் யூனியனில் இருந்து வெளியேறி தனிக்குடித்தனம் போயின.

இதற்கிடையே, 1960-களின் தொடக்கத்தில் உலக நாடுகளில் 'வெள்ளை தங்கம்' எனப்படும் பருத்திக்கான தேவை அதிகரித்தது. பருத்தி ஒரு சிறந்த பணப்பயிர் என்பதால், ரஷியா பருத்தி உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. அத்துடன் நெல், சிறுதானியங்களையும் அதிக அளவில் பயிரிட ஆரம்பித்தது. தரிசு நிலமாகவும், பாலைவனமாகவும் இருந்த இடங்களையெல்லாம் திருத்தி விவசாய நிலம் ஆக்கியது.

இதனால் வேளாண்மைக்கான நீர் தேவை அதிகரித்ததால், ஆரல் கடலுக்கு கெட்ட காலம் தொடங்கியது. ஒன்றின் அழிவில்தானே மற்றொன்றின் வளர்ச்சி இருக்கிறது. கடலுக்கு சென்று கொண்டிருந்த ஆறுகளையெல்லாம் ரஷியா திருப்பி, தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தியது. இதற்காக ஏராளமான கால்வாய்களையும் வெட்டியது.

சிர்தாரியா ஆற்றை கடலுக்கு செல்லாமல் திருப்பிவிட்டதன் மூலம் மட்டும், ரஷியா புதிதாக 50 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்துள்ளது. இதனால் கடலுக்கு வரும் நீர் குறைய தொடங்கியது. வேளாண்மை பரப்பு அதிகரிக்க அதிகரிக்க பெரிய ஆறுகளில் இருந்து கடலுக்கு தண்ணீர் வருவது கிட்டத்தட்ட நின்று போனது.

இதனால் ஆரல் கடலின் நீர்மட்டம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. 1961 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம், ஆண்டுக்கு 20 செ.மீ. அளவுக்கு குறைய தொடங்கியது. 1970 முதல் 1980 வரையிலான பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 60 செ.மீ. அளவிலும், 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 90 செ.மீ. என்ற அளவிலும் நீர்மட்டம் வேகமாக குறைய ஆரம்பித்தது. இப்படி நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால், நீர் வற்றி கடலின் பரப்பளவு வெகுவாக சுருங்கியது.

1960 முதல் 1998 வரையிலான 38 ஆண்டுகளில் மட்டும் கடலின் பரப்பளவு 60 சதவீதம் சுருங்கியது. இதனால் நீரின் கொள்ளளவு 80 சதவீதம் குறைந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் பிரிந்து தனிநாடு ஆனது.

இதற்கிடையே நீர்மட்டம் குறைந்ததால்,1987-ம் ஆண்டில் நடுவில் உள்ள நிலப்பகுதி மேடாகி வடக்கு ஆரல், தெற்கு ஆரல் என்று கடல் இரண்டாக பிரிந்தது. தொடர்ந்து நீர் வற்றியதால் தெற்கு ஆரல் கடல் 2003-ம் ஆண்டு மேற்கு பகுதி-கிழக்கு பகுதி என இரண்டாக பிரிந்தது.

1960-ம் ஆண்டு 68 ஆயிரம் ச.கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்திருந்த ஆரல் 2004-ல் 4 துண்டுகளாக உடைந்து அதன் பரப்பளவு வெறும் 17 ஆயிரத்து 160 ச.கி.மீ.யாக சுருங்கிவிட்டது. அதன்பிறகும் நிலைமை தொடர்ந்து மோசமானதால், இப்போது அந்த கடலே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏரி போல் அங்கும் இங்குமாக நீர் தேங்கி கிடக்கிறது. அவ்வளவுதான்.



ஆரல் கடல் ஒரு காலத்தில் மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக விளங்கியது. கப்பல் போக்குவரத்தும், மீன்பிடி தொழிலும் மும்முரமாக நடந்து வந்தது. ஆற்று நீர் வரத்து குறைய ஆரம்பித்ததுமே, கடல் நீரின் உப்புத்தன்மை அதிகரித்து மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிய தொடங்கின. இப்போது அங்கு மீன்பிடி தொழில் எதுவும் நடைபெறவில்லை.

தண்ணீர் வற்றி ஆழம் குறைந்ததாலும், பரப்பளவு சுருங்கியதாலும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கைவிடப்பட்ட கப்பல்களும், படகுகளும் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் போல் நிற்கின்றன. உள்ளூர் மக்கள் அதிலுள்ள இரும்பு மற்றும் பொருட்களை வெட்டி எடுத்துக்கொண்டு போய் கடையில் போட்டு காசாக்கிவிட்டனர். பரபரப்பாக இருந்த துறைமுகங்களும், மீன்பிடி தளங்களும் மனிதர்கள் நடமாட்டம் இன்றி மயானபூமி போல் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

தூர்ந்து போன கடலையும், அங்கு அனாதையாக நிற்கும் துருப்பிடித்த கப்பல்களையும், படகுகளையும் பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். உள்ளூர் வழிகாட்டிகள் அவர்களை வாகனங்களில் அழைத்துச் சென்று, படுத்தபடுக்கையாக பரிதாபமாக கிடக்கும் நோயாளியை காட்டுவது போல் காட்டுகிறார்கள். நீரின் உப்புத்தன்மை கூடி அடர்த்தி அதிகரித்ததால் கடலில் இறங்கி நீந்தக்கூட முடியாத நிலைமை உள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கடல்வழி போக்குவரத்துக்கும், மீன்பிடி தொழிலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கிய ஆரல் கடல் இன்று காட்சிப் பொருளாகி, அழிவின் விளிம்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.

ஆரல் கடலின் பரிதாப நிலையை மையமாக வைத்து சில திரைப்படங்களும், ஆவணப்படங்களும் வெளியாகி உள்ளன.

கடல் வற்றுவது எப்போது? கருவாடு எப்போது சாப்பிடுவது? என்பார்கள். இங்கே ஆரல் கடல் வற்றிவிட்டது. ஆனால் மீனும் இல்லை, கருவாடும் இல்லை.

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை



ஆரல் கடல் வற்றி தூர்ந்து போனது உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐ.நா.சபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கான நிரந்தர பிரதிநிதி ஐ.நா.சபை கூட்டத்தில் பேசுகையில், ஆரல் கடலில் ஒரு காலத்தில் கப்பல் போக்குவரத்தும், மீன்பிடி தொழிலும் சிறப்பாக நடந்தது. இப்போது அங்கு படகுகளும், கப்பல்களும் மணலில் புதைந்து கிடக்கின்றன என்று கூறியதோடு, இந்த கடலுக்கு உயிர் கொடுப்பது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த கடலை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.

ஆரல் கடல் வற்றி அழிந்ததை, ''உலகின் மிகப்பெரிய பேரழிவு'' என்று ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் வர்ணித்து உள்ளார்.

இந்த கடலை பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை 1980-களிலேயே ரஷிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் இல்லை.

ஏனென்றால், ஆரல் கடலை சுற்றியுள்ள நாடுகளெல்லாம் ஆற்று நீரை கடலுக்கு செல்லவிடாமல் தடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்கின்றன. கடலை காப்பாற்றுவதற்காக அதிக வருவாய் கொடுக்கும் பருத்தி உற்பத்தியை கைவிட அந்த நாடுகள் தயாராக இல்லை. அதேசமயம், வேறு வழியில் கடலை காப்பாற்ற முடியுமா? என்றும் யோசித்து வருகின்றன. இது ''கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை'' என்பது போல் உள்ளது.

பருத்தி உற்பத்தியில் உலக அளவில் உஸ்பெகிஸ்தான் 8-வது இடத்தில் உள்ளது. (முதல் இடத்தில் இந்தியாவும், 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன) அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 7 லட்சம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதேபோல் கஜகஸ்தான், ரஷியாவிலும் அதிக அளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. இந்த நாடுகளும் பருத்தி ஏற்றுமதியில் நிறைய சம்பாதிப்பதால், பருத்தி உற்பத்தியை கைவிட வாய்ப்பே இல்லை.

இதற்கிடையே சர்வதேச நிபுணர்கள் குழு சில யோசனைகளை தெரிவித்து இருக்கிறது. பருத்திக்கு பதிலாக தண்ணீர் தேவை குறைவாக உள்ள வேறு பயிர்களை பயிரிடுதல், வேளாண்மை அல்லாத பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்தல், பருத்தி விளைச்சலில் ரசாயனத்தின் பயன்பாட்டை குறைத்தல், காஸ்பியன் கடலில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் ஆரல் கடலுக்கு நீரை கொண்டுவருதல் உள்ளிட்ட யோசனைகளை நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

இதை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா? நடைமுறைப்படுத்த இயலுமா? என்று தெரியவில்லை.

ஏனெனில், இந்த யோசனைகளெல்லாம் இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டுவது போல் உள்ளது.


ஆறுகளும் கடலும்...

மலைகளில் உற்பத்தியாகும் ஆறுகள் கடலில் போய் சங்கமிக்கின்றன. அந்த வகையில் ஆறுகளுக்கு மலை பிறந்த வீடாகவும், கடல் புகுந்த வீடாகவும் விளங்குகிறது. கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிய, நிலத்துக்கு பயன்பட்டது போக, மீதி நீர் மீண்டும் கடலுக்கே போய்ச் சேருகிறது. இது இயற்கையின் சுழற்சி.

ஆறுகளின் மூலம் கிடைக்கும் நீரை சிறிதும் வீணாக்காமல் முழுமையாக பயன்படுத்தலாமே என்று கருதலாம். அது சரியல்ல என்பது நிபுணர்களின் கருத்து.

ஏனெனில் கடலின் உயிரோட்டத்தை தீர்மானிப்பதில் மழைநீருக்கு மட்டுமின்றி, ஆறுகளுக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. ஆற்று நீர் தொடர்ந்து கடலில் சென்று கலந்தால்தான் கடலின் சமநிலை நீடிக்கும். கடல்வாழ் உயிரினங்களும் உயிர்வாழ முடியும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நடுவர் மன்றம் கூட, மொத்தம் உள்ள 740 டி.எம்.சி.யில் (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பங்கு என்று அறிவித்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டி.எம்.சி.யையும், வீணாகும் நீர் என்று 4 டி.எம்.சி.யையும் ஒதுக்கியது. இந்த நீர் என்பது கடலுக்கு செல்லும் நீரையும் உள்ளடக்கியது ஆகும்.


வெள்ளத்தில் மூழ்கியதால் மாயமான கிராமம்

அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனதை கதையாக கொண்டதுதான் 'சிட்டிசன்' திரைப்படம். அதேபோல் ஒரு கிராமமே காணாமல் போய் இருக்கிறது. எங்கே?...

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம்-தென்காசி சாலையில் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதியும், ராமநதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்தது அந்த அழகிய கிராமம். அதன் பெயர் பட்டமுடுக்கு (தற்போது தென்காசி மாவட்டம்). சுமார் பத்து பதினைந்து வீடுகளே இருந்த அந்த எழில் கொஞ்சும் கிராமத்தை சுற்றிலும் வயல்வெளிகள், தென்னந்தோப்புகள் என எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். 'ரெண்டாத்து முக்கு' என அழைக்கப்படும் அந்த இடத்துக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளிக்கூட குழந்தைககள் சுற்றுலா சென்று வருவார்கள்.

ஆனால் அந்த ஊருக்கு சாலை வசதியோ, மின்சார வசதியோ கிடையாது. பிரதான சாலைக்கு செல்லவேண்டும் என்றால் நடந்து செல்லவேண்டும். மாட்டு வண்டியில் செல்லவேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து நீண்ட தூரம் சுற்றிப் போகவேண்டும்.

மழைக்காலத்தில் இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மாட்டு வண்டி பயணம் தடைபடும். வீடுகளின் வாசலை தண்ணீர் எட்டிப்பார்க்கும். பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெரியவர்கள் தவிப்பார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவத்துக்காக வெளியில் செல்வதும் மிகுந்த சிரமம் ஆகிவிடும்.

1992-ம் ஆண்டு பருவமழையின் போது இரு ஆறுகளிலும் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து, வீடுகள் மூழ்கத் தொடங்கின. ஆடு, மாடு, கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தகவல் அறிந்து அதிகாரிகள் வந்து மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். வெள்ளம் வடிந்த பின் கிராமத்துக்கு திரும்பிய மக்கள், வீடுகளின் நிலைமையை பார்த்து இனி இங்கு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி எவ்வளவு காலம்தான் தவிப்பது என்று கருதிய அவர்கள் பின்னர் ஊரை காலி செய்து விட்டு அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு சென்று விட்டனர். அவர்களுடைய மறு குடியமர்வுக்காக ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுத்தது.

அந்த கிராமவாசிகள் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய வீடுகள் இடிந்து மண்ணோடு மண்ணாகி, சிறிது காலம் அழிவின் சான்றுகளாக காட்சி அளித்தன. அதன்பிறகு அங்கு செங்கல் சூளைகள் முளைத்தன.

ஆனால் அதே இயற்கை அழகு இன்னும் அங்கு குடிகொண்டிருக்கிறது. ஆறுகள் சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கின்றன. பொதிகை மலையில் இருந்து வரும் தென்றல் வழக்கம்போல் தவழ்ந்து செல்கிறது. அதை அனுபவிக்கத்தான் யாரும் இல்லை.


Next Story