பேனா மன்னன் பதில் சொல்கிறார்


பேனா மன்னன் பதில் சொல்கிறார்
x

பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.

கேள்வி: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாரே... (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)



பதில்: தூய தமிழில் பெயர் வைத்தால் குழந்தைகளை அழைக்கும் போதெல்லாம் இனிக்கும். மனம் மகிழும்.

*******************

கேள்வி: வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை அரசியலில் இருந்து நீக்கினால் என்ன? (குரு ராஜன், விழுப்புரம்)

பதில்: அதை செய்தால் எந்த கட்சி மிஞ்சும்? என்பதை தேடித்தான் பார்க்கவேண்டும்.

*******************

கேள்வி: சமூக ஆர்வலராக நல்லதை செய்தால் நன்மை வருமா? (கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்)

பதில்: நல்லதை செய்தால் என்றும் நன்மை பின்தொடரும்.

*******************

கேள்வி: தாமரையுடன் ஒட்டியிருக்கும் இரட்டை இலை உதிருமா, துளிர்க்குமா? (எச்.மோகன், திருவாரூர்)


பதில்: அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தான் தெரியும்.

*******************

கேள்வி: ஆமை புகுந்த வீடு விளங்காது என்ற பழமொழிக்கு தாங்கள் தரும் அர்த்தம்? (எச்.பஹதூர், ஜமாலியா லைன், சென்னை)

பதில்: ஆமை என்பது மெத்தனத்தை குறிக்கிறது. மெத்தனம் இருக்கும் வீடு முன்னேற முடியாது.

*******************

கேள்வி: பெண்களை மட்டும் மங்கையர், நங்கையர், பூவையர், வனிதையர் என்றெல்லாம் வர்ணிக்கிறார்களே, ஏன்? (குலசை நஜிமுதீன், மாம்பாக்கம், சென்னை)


பதில்: அவர்கள் இவை அனைத்துக்கும் உரியவர்களாக இருப்பதால்.

*******************

கேள்வி: துணிச்சலை வளர்த்துக் கொள்வது எப்படி? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: துணிச்சலாக இருப்பதை போலவும், தடைகளை தகர்த்தெறிவது போலவும் மனதில் காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தால் துணிச்சல் தானாக வந்துவிடும்.

*******************

கேள்வி: அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிக்கும், காதலி தரும் வாக்குறுதிக்கும் என்ன வித்தியாசம்? (என்.எஸ்.கே.செல்வகுமார், மேற்பனைக்காடு)


பதில்: காரியம் நிறைவேறும் வரை தான் இரண்டு வாக்குறுதிகளும்.

*******************

கேள்வி: நம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களுக்கு நம் கண் பார்த்து பேசும் துணிச்சல் இருப்பதில்லையே... (ஜி.ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)

பதில்: கோழைகள் அவர்கள்.

*******************

கேள்வி: கலைஞர் கருணாநிதியின் அரசியல் அனுபவம், பேச்சுத்திறன், எழுத்தாற்றல் இவை எல்லாம் அறிந்த இன்றைய அரசியல் தலைவர்கள் யாரேனும் உண்டா? (கே.எம்.ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி)


பதில்: கலைஞரை பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட முழுமையாக அறியாதவர்கள் தமிழக அரசியலில் யாரும் இருக்கவே முடியாது.

*******************

கேள்வி: பிரச்சினை எரியும்போது, அதில் தண்ணீர் ஊற்றவேண்டுமா? எண்ணெய் ஊற்றவேண்டுமா? (ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை)

பதில்: பிரச்சினை தீரவேண்டும் என்றால் தண்ணீர் போன்ற அன்பு நடவடிக்கைகளால் தான் தணிக்க வேண்டும்.

*******************

கேள்வி: ஒரு நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டும்? (ஏ.எஸ்.நடராஜன், கோவில்தெரு, சிதம்பரம்)


பதில்: இப்போது வாழ்பவர்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு போல இருந்தால், இதுவரை வாழ்ந்து மறைந்த சில நல்ல தலைவர்களை பின்பற்றுவது போல இருக்கும்.

*******************

கேள்வி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்ததை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்த்தன? (எஸ்.மோகன், கோவில்பட்டி)

பதில்: ஜனாதிபதி திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கூற்று.

*******************

கேள்வி: சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)

பதில்: மனம் தளராதீர்கள். அடுத்த முறை ஏறும்போதே முழத்துக்கு மேல் ஏறிவிடுங்கள்.

*******************

கேள்வி: ஆன்-லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்று மத்திய மந்திரி பேசியிருக்கிறாரே? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)

பதில்: மாநில அரசுக்கு தார்மீக உரிமை இருப்பதால் தான் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது.

*******************

கேள்வி: தக்காளி விலையை குறைக்க சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்து செய்யலாம் என்று வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா சொல்கிறாேர? (கவிதா, வாணியம்பாடி)

பதில்: தக்காளி விலை உயர்வை காரணம் காட்டி அவரது நீண்டநாள் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கிறார். பலே கில்லாடி தான் அவர்.

*******************

கேள்வி: வெற்றிலை - முருங்கைக்கீரை செக்ஸ்-க்கு உகந்தது என்று கூறுவது பற்றி... (மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்)



பதில்: இரண்டுமே செக்ஸ் உணர்வை தூண்டும் என்கிறார், சித்த வைத்திய நிபுணர் டாக்டர் மானெக்ஷா.

*******************

கேள்வி: ஊழல் ஊழல் என்று எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பேசுகிறார்களே... அப்படியானால் ஊழல் இல்லாத அரசியல் தலைவர் யார்? (கிறிஸ்டோபர், நாகர்கோவில்)


பதில்: அவரைத்தான் சமுதாயம் தேடிக்கொண்டு இருக்கிறது.


Next Story