மலைவாழ் பெண்களை தொழில்முனைவோராக மாற்றிய பேராசிரியை


மலைவாழ் பெண்களை தொழில்முனைவோராக மாற்றிய பேராசிரியை
x

பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மலைவாழ் பெண்களின் வாழ்வை வளமாக்கி இருக்கிறார், ஹிர்தி.

உலகியல் மாற்றங்களுக்கு ஏற்ப மகளிரின் வாழ்வியலும் வேகமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. தங்கள் தனித்திறன்களை நிரூபித்து ஆண்களுக்கு இணையாக தங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நகர்ப்புற, கிராமப்புற பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கும் அளவுக்கு மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் உழைப்பும், திறமையும் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். அவ்வாறு பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மலைவாழ் பெண்களின் வாழ்வை வளமாக்கி இருக்கிறார், ஹிர்தி.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்த இவர் எம்.டெக் படித்து வருகிறார். அதற்கு முன்பாக உணவுத்துறை சார்ந்த பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். அத்துடன் உணவுத் தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் தெரி குர்வால் பகுதியில் உள்ள வீர் சந்த்ரா சிங் கார்வாலி தோட்டக்கலை மற்றும் வனத்துறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார்.

அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் பெண்களின் வறுமை வாழ்க்கை முறையை பார்த்து வேதனை அடைந்தவர் அவர்களுக்கு உதவ முன் வந்தார். அவர்களுக்கு உணவு தயாரிப்பு, தோட்டக்கலை, இயற்கை விவசாயம் போன்றவற்றை பயிற்றுவித்து அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

முதல்கட்டமாக மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் பழங்கள், பயிர்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை மண்ணின் தன்மைக்கு ஏற்றதுபோல விவசாயம் செய்யவும் சொல்லிக்கொடுத்துள்ளார். மேலும், ராகியால் செய்யப்படும் பர்பி மற்றும் லட்டுக்களையும் தயாரிக்க பயிற்சி அளித்துள்ளார். ஜாம், மாவு தயாரிப்பு மற்றும் இதர உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார். இதில் ஜெல்லி, குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பெண்கள் அல்லது இளம் வயது பெண்கள் உண்பதற்கான பாரம்பரிய உணவுகள், ஊறுகாய் உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஹிர்தியின் முயற்சியால் இப்போது மலைவாழ் பெண்கள் உணவுத்துறை தொழில்முனைவோர்களாக மாறி இருக்கிறார்கள்.

மலைவாழ் பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார் ஹிர்தி. இதனால் அப்பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மழைவாழ் பெண்களின் வாழ்வை மாற்றியதற்காக ஹிர்திக்கு, 'விரங்கனா திலு ரவுடெலி விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story