பூக்களை கொண்டும் சமைக்கலாம்...!


பூக்களை கொண்டும் சமைக்கலாம்...!
x

தனியார் டி.வி.சேனல் நடத்தும் சமையல் போட்டியில் கலந்துகொண்டு, ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளை சமைத்துக் காட்டி அசத்துகிறார் அவினாஷ் பட்நாயக்.

சமையல் மீது இருந்த நேசத்தால் விவசாய அதிகாரி பணியை ராஜினாமா செய்தார், அவினாஷ் பட்நாயக். இவர் இன்றைக்கு தனியார் டி.வி.சேனல் நடத்தும் சமையல் போட்டியில் கலந்துகொண்டு, ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளை சமைத்துக் காட்டி அசத்துகிறார்.

அவினாஷின் தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியதால், குடும்பம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. இது, அவருக்கு பல்வேறு உணவுகள் மற்றும் கலாசாரங்களை கற்றுக் கொடுத்தது. இந்த அனுபவம் தான் பல்வேறு உணவு வகைகளை செய்யும் பரிசோதனைக்கு உட்பட காரணமாக இருந்தது.

இது குறித்து அவர் கூறும்போது, ''சமையலில் எனது ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்த போது, தாவரங்கள் குறித்த படிப்பிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். மலர் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்று அரசு விவசாய அதிகாரி ஆனேன். ஒடிசாவில் 6 ஆண்டுகள் பணியாற்றினேன். இருந்தாலும் எனது வாய்ப்பு வேறு இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நமக்கு ஒரு வாழ்க்கை தான் கிடைக்கும்.

வயதான பிறகு வருத்தப்படுவதைவிட, இப்போது அதை முயன்று பார்ப்பது சிறப்பானது என்று தோன்றியது. உடனே அரசுப் பணியை விட்டேன். சமையலில் பி.எச்டி படிப்பை தொடர முடிவு செய்தேன். நான் அரசுப் பணியை விடுவது என் அம்மா மற்றும் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பலரும் திட்டினார்கள். எனினும் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருந்தேன்.

சமையல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது என் திட்டத்திலேயே இல்லை. பி.எச்டி படிப்பதில் தான் கவனம் செலுத்தினேன். எனினும், என்னைச் சுற்றியிருந்தவர்கள் சமையல் போட்டியில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தினார்கள். இந்தப் போட்டியின் மூலமாக ஒடிசாவில் உள்ள பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு நினைவூட்ட அறிவுறுத்தினர். பெரும்பாலான சமையல்காரர்களும் உணவுப் பிரியர்களும் மேற்கத்திய உணவு வகைகளின் பின்னே செல்கின்றனர். ஆனால் நான் தாய்நாடு, அம்மாவின், பாட்டியின் சமையல் குறிப்புகளை பாதுகாக்க விரும்பினேன்.

ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளில் பூக்களை பயன்படுத்துவது வழக்கம் உண்டு. குறிப்பாக, நான் தாவரங்கள் குறித்து படித்திருந்ததால், அதை முயன்று பார்ப்பது சுலபமாக இருந்தது. மேலும் ஒடிசாவின் பாரம்பரிய உணவுகள் என்பதை தாண்டி, அறியப்படாத உண்ணக்கூடிய பூக்களை உணவாக பயன்படுத்தலாம் என்பதை விளம்பரப்படுத்துவதே எனது நோக்கம். அதை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறேன். பி.எச்டி, சமையல் போட்டி.... இவை எல்லாம் முடிந்தவுடன், ஒருநாள் சொந்தமாக உணவகத்தை தொடங்க வேண்டும் என்பது தான் என் கனவு. அந்த உணவகத்தில் மக்கள் வந்து உண்மையான ஒடிசா உணவை பூக்கள் கலவையுடன் அனுபவிக்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்றார்.

ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளில் பூக்களை பயன்படுத்துவது வழக்கம் உண்டு. குறிப்பாக, நான் தாவரங்கள் குறித்து படித்திருந்ததால், அதை முயன்று பார்ப்பது சுலபமாக இருந்தது.


Next Story