காஷ்மீரில் ஆனந்த் மஹிந்திராவின் மனதை வசீகரித்த 10-நட்சத்திர ஓட்டல்! இந்திய ராணுவத்தின் "லாக் ஹட் கபே''


காஷ்மீரில் ஆனந்த் மஹிந்திராவின் மனதை வசீகரித்த 10-நட்சத்திர ஓட்டல்! இந்திய ராணுவத்தின் லாக் ஹட் கபே
x

என்னை பொறுத்தவரையில், இந்த கபே 5-நட்சத்திர ஓட்டலோ அல்லது 7-நட்சத்திர ஓட்டலோ அல்ல.இது 10-நட்சத்திர ஓட்டல்!

ஸ்ரீநகர்,

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு ஓட்டலின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

'லாக் ஹட் கபே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல், முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தால் மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.

மஹிந்திரா அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் கூறியதாவது, "என்னை பொறுத்தவரையில், இந்த கபே 5-நட்சத்திர ஓட்டலோ அல்லது 7-நட்சத்திர ஓட்டலோ அல்ல. ஆனால், இது 10-நட்சத்திர ஓட்டல்!" என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கரிமா கோயல் என்ற பெண் ஊழியர், இந்த அழகான ஓட்டலுக்கு நமக்கு சுற்றுப்பயணம் செய்து காண்பிக்கிறார். அதன் சுற்றுப்புறம், அலங்காரம் மற்றும் மெனுவை முன்னிலைப்படுத்துகிறார். மேலும், வீடியோவின் முடிவில், இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக இந்த ஓட்டலுக்கு வருகை தருமாறு பயணிகளை அவர் கேட்டுக்கொள்கிறார்.

இதை பார்த்த பலரும், அழகான மற்றும் வசதியான ஓட்டலை பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயமாக அதை பார்வையிடுவோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஒரு வாசகர் கூறியதாவது, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24, 2021 அன்று இந்த ஓட்டலின் தொடக்கவிழா தினத்தன்று, நானும் எனது நண்பர்களும் அங்கு சென்றது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அங்குள்ள ஜவான்கள் மிகவும் விருந்தோம்பல் செய்தனர்.

அங்கிருந்து புறப்படும் முன்னர், சாப்பிட்ட உணவிற்கான பில் பற்றி கேட்டதற்கு அவர்கள் கூறியது ஆச்சரியமளித்தது, "இல்லை தம்பி, நீங்கள் இன்று இந்த ஓட்டல் குறித்த உங்கள் கருத்துகளை தெரிவித்தால் போதும். பில் கிடையாது" என்று நெகிழ வைத்தனர்" என்றார்.


Next Story