பாரம்பரியமான, மீனாகரி நகை குடும்பம்..!

பல நூற்றாண்டுகளாக ராஜஸ்தானி குடும்பத்தினர் ஆடம்பர நகைகளை கையால் செய்து அசத்தி வருகின்றனர். மீனாகரி நகைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கு சிறந்த திறமை தேவை.
ராஜஸ்தானில் மணப்பெண்களுக்கு மீனாகரி நகைகளை அணிவிப்பது வழக்கம். இந்த நகைகளை தலைமுறை, தலைமுறையாக ஜஸ்வந்த் குமார் மீனாகரின் குடும்பம் தான் அழகாக வடிவமைத்து வருகின்றனர். இது குறித்து 75 வயது ஜஸ்வந்த் கூறும்போது, ''மீனா என்றால் நிறங்கள். கரி என்றால் வேலை என்று அர்த்தம். மீனாகரி என்றால் வண்ணங்களுடன் வேலை செய்வது என்று பொருள். மீனாகரி என்பது உலோகத்தில் தயாரிக்கப்படும் பற்சிப்பி ஓவியத்தின் ஒரு பழங்கால வடிவம். இது பெர்சியாவில் உருவானது. முகலாயர்களால் இந்தியாவில் பிரபலமடைந்த இந்த நகைகள், 16-ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் சந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. இன்றைக்கும் ராஜஸ்தான் கைவினை கலைஞர்கள் இதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.
மீனாகரி நகைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கு சிறந்த திறமை தேவை. செயல்முறை சிக்கலானது. இதனை உருவாக்க அதிக நேரம் தேவைப்படும். பொறுமை மிகமிக அவசியம். பாரம்பரிய நிறங்களான சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் ரூபி ஆகியவை பற்சிப்பி கலையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
உலோகத்துண்டில் பேஸ்ட் அல்லது பொடியைப் பூசுகிறோம். பின்னர் அது அதிக வெப்பநிலையில் சூடேற்றப்படுகிறது. இது வண்ணமயமான பூச்சுகளை உருவாக்குகிறது. பின்னர் பார்வையை ஈர்க்கும் கலைப் படைப்புகளாக மாறுகிறது.
எங்கள் குடும்பத்தில் பல நூற்றாண்டுகளாக இந்த பற்சிப்பி போடும் பாரம்பரியம் தொடர்ந்து வருகிறது. ராஜஸ்தானில் அரச குடும்பங்களுக்கு மீனாகரி நகைகளைத் தயாரித்து எங்கள் குடும்பத்தினர் வழங்கி இருக்கின்றனர்" என்றார்.
இந்த தொழிலில் 55 ஆண்டுகள் அனுபவமுள்ள ஜஸ்வந்த், கலை வடிவத்தைப் பாதுகாத்துப் பரப்பியதற்காக தேசிய மெரிட் விருதை பெற்றுள்ளார். இவருடைய தந்தை தீன் தயாள் மீனாகர் கூட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாகரி நகைகள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கு சிறந்த திறமை தேவை. செயல்முறை சிக்கலானது. இதனை உருவாக்க அதிக நேரம் தேவைப்படும்.






