சென்னிமலை ரோட்டில் போக்குவரத்து நொிசல்சிக்கலான மேம்பாலத்தால் திக்குமுக்காடும் வாகன ஒட்டிகள்


சென்னிமலை ரோட்டில் போக்குவரத்து நொிசல்சிக்கலான மேம்பாலத்தால் திக்குமுக்காடும் வாகன ஒட்டிகள்
x

ஈரோடு சென்னிமலை ரோட்டில் சிக்கலான மேம்பாலத்தால் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனா்.

ஈரோடு

ஈரோடு மாநகரம் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, பூந்துறை ரோடு என அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்து உள்ளன. அனைத்து ரோடுகளிலும் தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

குறுகிய சாலை

சென்னிமலை ரோடு மட்டும் இன்னும் குறுகிய சாலையாகவே உள்ளது. ஈரோட்டில் இருந்து ரிங் ரோட்டை அடைய குறைந்த தூரத்தில் இருப்பது சென்னிமலை ரோடு. எனவே வெளியூர் செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டைத்தான் தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால், குறுகலான இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

குறிப்பாக சென்னிமலை ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அலுவலகம் முதல் போக்குவரத்து பணிமனை வரையிலான பகுதியில் சாலை மிகவும் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் உள்ளது. அதுவும் பணிமனைக்கு பஸ்கள் வருகிற நேரம் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

சாஸ்திரி நகர் பாலம்

இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கைகள் இருந்தாலும் சாஸ்திரி நகர் மேம்பாலம் பகுதியில்தான் அதிக பிரச்சினை ஏற்படுகிறது. சாஸ்திரி நகர் செல்லும் பழைய ரோட்டில் ரெயில்வே கேட் இருந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தினசரி வந்து செல்லும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழியாகத்தான் வந்து செல்லும் என்பதால் தினசரி ஒன்று அல்லது 2 மணி நேர அளவுக்கு மட்டுமே இந்த சாலை திறக்கப்படும் சூழல் இருந்தது. எனவே பொதுமக்களின் தீவிர கோரிக்கைகளுக்கு பின்னர், அ.கணேசமூர்த்தி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் முயற்சியால் சாஸ்திரி நகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.

ஆனால், சாஸ்திரி நகர் பகுதியில் இருந்து சென்னிமலை ரோட்டுக்கு வரும் வாகனங்கள் பாலத்தில் எளிதாக செல்வதுபோல, சென்னிமலை ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் எளிதாக பயன்படுத்த முடிவதில்லை. இந்த பகுதி சரியாக திட்டமிடப்படாமல் இருப்பதால் கார்கள் கூட அங்கு திரும்ப முடியாத சூழல் உள்ளது. சிக்கலான இந்த மேம்பாலத்தால் வாகன ஓட்டிகன் திக்குமுக்காடி வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை தீர்க்கவும், பாலம் முழுமையாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படவும் ஒரு இணைப்பு பாலம் அமைத்து சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

அச்சம்

மினி லாரி டிரைவர் கர்ணன்:-

சென்னிமலை ரோடு வழியாக அடிக்கடி வாகனத்தில் செல்ல வேண்டியது உள்ளது. ஈரோட்டில் மற்ற ரோடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறுகலான ரோடாகத்தான் இது இருக்கிறது. அதுவும் இந்த பாலம் பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் அளவுக்கு சாலை குறுகலாக இருக்கிறது. காலை மாலை நேரங்களில் ஏராளமான 2 சக்கர வாகனங்கள், கார்கள் செல்கின்றன. ஒரு வாகனம் இந்த பகுதியில் முந்தி சென்றாலும் மோதி விடுமோ என்ற அச்சத்துடன்தான் செல்ல வேண்டும்.

இதை தவிர்க்க ஈரோடு சாலையில் இருந்து மேம்பாலத்துக்கு ஒரு இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து வாகனங்களும் நேரடியாக மேம்பாலத்தில் ஏறி இந்த பகுதியை கடந்து சென்று விடும். போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு இருக்காது.

குழப்பம்

ஆட்டோ டிரைவர் எம்.சீனிவாசன்:-

சாஸ்திரி நகர் பாலம் எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில் இருந்து செல்லும் எந்த வாகனமும் பாலத்தில் நேரடியாக செல்ல முடியாது. அருகில் ஒரு ரவுண்டானா வைத்து இருக்கிறார்கள். அதில் எந்த பக்கம் இருந்து வரும் வாகனம் எப்படிசெல்ல வேண்டும் என்பதில் கடுமையான குழப்பங்கள் உள்ளது.

பாலத்தில் இருந்து இறங்கி ஈரோடு வரும் வாகனங்களாக இருந்தாலும் சரி, ஈரோடு ரோட்டில் இருந்து பாலத்தில் ஏற வேண்டிய வாகனங்களாக இருந்தாலும் சரி டிரைவர்கள் அச்சத்திலேயேதான் ஓட்ட வேண்டியது இருக்கிறது. ஈரோடு பகுதியில் சாலையில் வேலை நடந்தால் இந்த பாலம்தான் இப்போது மாற்றுச்சாலையாக உள்ளது. அப்படி வாகனங்கள் விடப்படும்போது புதிதாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

எனவே இதற்கு ஒரே தீர்வாக ஈரோடு ரோட்டில் இருந்து இணைப்பு மேம்பாலம் கட்ட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த பாலம் கட்டப்பட்டதற்கான நோக்கம் நிறைவடையும். தற்போது இரவு நேரங்களில் வாகனங்கள் எதுவும் பாலம் வழியாக செல்லாது என்பதை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதையும் தடுக்க முடியும்.

இணைப்பு பாலம் அவசியம்

ஆட்டோ டிரைவர் செல்லத்துரை:-

நான் முத்தம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். பெரும்பாலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னிமலை ரோட்டில்தான் செல்வேன். போக்குவரத்து பணிமனை பகுதியில் செல்லும்போது மிகவும் சிரமமாக இருக்கும். இங்கிருந்து சாஸ்திரி நகர் பாலத்தில் ஏற வேண்டும் என்றால் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சிரமம்தான். இரவு நேரத்தில் போக்குவரத்துக்கழக பஸ்கள் பாலத்தையொட்டிய ரோட்டில் நிறுத்தி வைக்கப்படுவதால் வேறு வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

இங்கு ஈரோடு ரோட்டில் இருந்து மேம்பாலத்தையொட்டி இணைப்பு பாலம் கட்டினால் எந்த பிரச்சினையும் இன்றி வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி மறுபுறம் இறங்கி விடும். எனவே இணைப்பு பாலம் மிகவும் அவசியமாகும்.

இதுபோல் மேம்பாலம் சாஸ்திரி நகரில் முடியும் இடத்தில் இருந்து ரெயில்வேயையொட்டி லட்சுமி கார்டன் சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்லும்படி உருவாக்க வேண்டும். இதன் மூலம் காலை நேரத்தில் கே.கே.நகர் முதல் ரெயில்நிலையம் வரையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொதுவாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த பாலம் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டு இருப்பதாகவே குற்றம் சாட்டுகிறார்கள். இதில் இணைப்பு பாலம் அமைப்பதன் மூலம் அனைவரும் பயன்படுத்தும் பாலமாக மாற்ற முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story