ஓட்டம் ஏற்படுத்திக் கொடுத்த உருமாற்றம்

உணவு பழக்கமும், ஓட்டப்பயிற்சியும்தான் பக்கவிளைவுகள் ஏதுமின்றி உடல் எடை குறைவதற்கு வழிவகுத்தன என்கிறார் ஸ்ரேயாஸ் கர்னாட்.
மூன்றே ஆண்டுகளில் 120 கிலோ எடையில் இருந்து 62 கிலோவாக உடல் எடையை குறைத்து 'ஸ்லிம்'மான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார், ஸ்ரேயாஸ் கர்னாட். 35 வயதாகும் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். உணவு பழக்கமும், ஓட்டப்பயிற்சியும்தான் பக்கவிளைவுகள் ஏதுமின்றி உடல் எடை குறைவதற்கு வழிவகுத்தன என்கிறார்.
ஸ்ரேயாஸ் தனது உடல் எடையை நிர்வகிப்பதற்கு ஓட்டம் பெரிதும் உதவியது என்று கூறினாலும், விளையாட்டு பயிற்சிகளும் முக்கிய அங்கம் வகித்திருக்கின்றன. ''நான் ஓடுவதற்கு விரும்பினேன். தினமும் காலையில் எழுந்ததும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை தவறவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். உடல் எடை குறைய தொடங்கிய பிறகும் இதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனை பின்பற்றியதால் உடல் எடை குறைந்து வருவதை கண்கூடாக உணர்ந்து கொள்ள முடிந்தது. எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் எடையை குறைப்பது சாத்தியம் என்பதையும் உணர வைத்தது. அதனால் ஓடுவதை நிறுத்துவதற்கு மனமில்லை. அதனையே தொழிலாக மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்'' என்பவர் உடற்பயிற்சியாளராக மாறிவிட்டார்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதுடையவர்களையும் ஒருங்கிணைத்து ஓட்டப்பயிற்சி அளித்து வருகிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடற்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு ஊக்கம் அளித்தும் வருகிறார்.
பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் சிங்கப்பூரில் பணிபுரிந்தவர். அங்கு ஓட்டப்பயிற்சி வழங்கும் மையத்திற்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார். ''அந்த மையத்தில் ஓடுவதற்குதான் பயிற்சி கொடுப்பார்கள். அனைத்து வயதினரும் ஒன்றாக சேர்ந்து ஓடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வயது வித்தியாசமின்றி ஓடுவதை விளையாட்டாக மேற்கொண்டதை பார்த்ததும் எனக்கு ஓட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அது மக்கள் அனைவரையும் பேதமின்றி ஒன்றிணைத்தது. அதுபோன்ற சூழலை நாமும் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்'' என்கிறார். ஸ்ரேயாஸ் 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார். அங்கு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தவர் ஓடும் வழக்கத்தை தவறாமல் பின் தொடர்ந்திருக்கிறார்.
''2015-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து மைசூரு வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். அது மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் கல்விக்கு நிதி திரட்டுவதற்கான பயணமாக அது அமைந்திருந்தது. உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரமாகவும் விளங்கியது. ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்தகுதியை வலுப்படுத்தும் பயிற்சிகளை அளிக்கும் ஆர்வத்தை தூண்டியது'' என்கிறார்.
அந்த சமயத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார். எழுந்து நடமாட முடியாமல் பல மாதங்கள் படுத்த படுக்கையாக முடங்கி கிடந்திருக்கிறார். ''அந்த காலகட்டம் மிக கொடுமையானது. கடுமையான உடல் வலியை அனுபவித்தேன். முதுகுவலியால் ரொம்பவே அவதிப்பட்டேன். அந்த நேரத்தில் நிறைய சிந்திக்க ஆரம்பித்தேன். எழுந்து நடப்பதற்கு நான் கற்றுக்கொண்ட ஓட்டப்பயிற்சிதான் கைகொடுத்தது. படிப்படியாக நடக்கத் தொடங்கினேன். அது கொடுத்த தைரியம் ஓட்டப்பயிற்சி செய்வதற்கு தூண்டியது.
என்னை இயல்பு நிலைக்கு திரும்ப வைத்த ஓட்டப்பயிற்சியை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓட்டத்தையே தொழில் ரீதியாக மேற்கொள்ள தொடங்கினேன். நான் கற்ற பயிற்சி முறைகளை பின்பற்றி எப்படி வார்ம் அப் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் ஓட வேண்டும் என்பது போன்ற அடிப்படை பயிற்சிகளை அளிக்க தொடங்கினேன். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
2 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி கடற்கரையில் ஓட வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு இந்தியா முழுவதும் பயணம் செய்து பயிற்சி பட்டறைகள் நடத்த ஆரம்பித்துவிட்டேன். கடந்த ஏழு ஆண்டுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளித்துள்ளோம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர்கள் வரை என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள்.
ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. அவை சிறப்பாக இயங்க வைக்க உதவும். சரியான மனநிலையுடன் பயணிக்க வைத்து வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்ல உதவும். அதற்கு வழிகாட்டியாக இருக்க நான் விரும்புகிறேன். ஆரம்பத்தில் என் உடல் எடையை குறைப்பதற்குதான் முயற்சித்தேன். அதுவே என் வாழ்க்கையை மாற்றியமைத்துவிட்டது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு முயற்சிக்கிறேன்'' என்கிறார்.






