பல்கலைக்கழகமும், பிரபலமும்..!


பல்கலைக்கழகமும், பிரபலமும்..!
x

இந்தியாவில் இருக்கும் மிக பிரபலமான பல்கலைக்கழகங்களையும், அதில் படித்த பிரபலங்களையும் தெரிந்து கொள்வோம்...

1. மும்பை பல்கலைக்கழகம் (1857)

இந்தியாவில் ஆங்கிலேயரால் முதன்முதலாக தொடங்கப்பட்ட 3 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு, சென்னை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம். கலினா, தானே, துறைமுகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகம் இது. 1996-ல் மும்பை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒழுக்கமும், நடத்தையும்தான் சிறந்த கல்வி என்பது இவர்களின் கல்வி மந்திரம்.

புகழ்பெற்ற மாணவர்கள்: இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவரான பி.ஆர். அம்பேத்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி(ரிலையன்ஸ்), அணு விஞ்ஞானியான ககோட்கர்.

2. சென்னை பல்கலைக்கழகம் (1857)

ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட தொன்மையான பல்கலைக்கழகமான இதில், மாணவரின் இயற்கையான திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வாசகம்தான் இலக்கு. சேப்பாக்கத்தில் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மாணவர்கள்: நோபல்பரிசு வென்ற இயற்பியலாளர் சி.வி. ராமன், முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன்.

3. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (1875)

சர் சையத் அகமது கான் தொடங்கிய மொகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி, 1920-ம் ஆண்டு அலிகார் பல்கலையாக மாறியது. இது மத்திய பல்கலைக்கழக தகுதி கொண்ட கல்வி நிறுவனம்.

ஒருவர், தான் அறியாததை பிறருக்கு கற்றுத்தரக்கூடாது என்பது இவர்களின் கல்வி மந்திரம்.

புகழ்பெற்ற மாணவர்கள்: முன்னாள் துணை ஜனாதிபதியான முகமது ஹமீது அன்சாரி, முன்னாள் ஜனாதிபதியான ஜாகீர் ஹுசைன், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி முப்தி மொகமது சயீத்.

4. அலகாபாத் பல்கலைக்கழகம் (1876)

முய்ர் சென்ட்ரல் கல்லூரிதான் பின்னாளில் அலகாபாத் பல்கலைக்கழகமாக உருவானது. 2005-ம் ஆண்டு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்தது. ஒவ்வொரு கிளையும் மரத்தை உருவாக்குகிறது என்பது இவர்களின் முன்னேற்ற மொழி.

இந்தியாவின் 4-வது பழமையான பல்கலைக்கழகம் இது. கிழக்கின் ஆக்ஸ்போர்டு என்பது இதன் செல்லப்பெயர். புகழ்பெற்ற மாணவர்கள்: முன்னாள் பிரதமர் சந்திரசேகர், வி.பி. சிங், சுதந்திரப் போராட்ட வீரரான கோவிந்த் வல்லப பந்த்.

உலகின் பழமையான பல்கலைக்கழகங்கள்

போலோனா பல்கலைக்கழகம் (1088), இத்தாலி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்(1096-1167), இங்கிலாந்து

சலமன்கா பல்கலைக்கழகம்(1134), ஸ்பெயின்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(1209), இங்கிலாந்து.


Next Story