கலைமகளின் கைப்பொருளான வீணை


கலைமகளின் கைப்பொருளான வீணை
x

கலைமகளின் கைப்பொருளாக விளங்கும் வீணைக்கு தமிழ் இசையில் முக்கிய பங்கு உண்டு. பழங்காலத்திலேயே வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-ம் நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. பலா மரத்தினால் செய்யப்படும் வீணை குடம், மேற்பலகை, மாடச்சட்டம், யாழிமுகம், லாங்கர், குதிரைகள் என பல முக்கிய பாகங்களை கொண்டது. வீணை தண்டின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாழி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும்.

வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும், தாளத்துக்காகவும் அமைந்துள்ளன. தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை வாசிக்கப்படுகிறது.

வீணையில் சரஸ்வதி வீணை, ருத்ர வீணை, விசித்திர வீணை, மகாநாடக வீணை என்று பல வகைகள் உள்ளன. ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும், குடமும் குடைந்து செய்யப்படும் வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். தம்புராவும், தவிலும் வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் ஆகும்.

வீணை சிட்டிபாபு, எஸ்.பாலச்சந்தர், வீணை காயத்ரி, ஆர்.பிச்சுமணி அய்யர், காரைக்குடி சாம்பசிவ அய்யர், ராஜேஷ் வைத்யா ஆகியோர் புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர்கள் ஆவார்கள்.

தஞ்சாவூர் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வீணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அங்கு வீணை தயாரிப்பு பட்டறை நடத்தி வரும் ஜி.ரமேஷ் என்பவர் கூறியதாவது:-

எனது தந்தை கோவிந்தராஜ் 55 ஆண்டுகளாக வீணை தயாரிப்பு பட்டறை நடத்தி வருகிறார். நான் அவருடன் சேர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளேன். எங்கள் பட்டறையில் ஒட்டு வீணை, ஏகாந்த வீணை, ருத்ர வீணை, மதுரா வீணை போன்ற வீணைகளை செய்கிறோம். ஒரு வீணையை தயாரித்து முடிக்க 20 நாட்கள் வரை ஆகும். வீணையின் வகையை பொறுத்து சுமார் ரூ.25 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறோம். சென்னை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து வாங்கிச்செல்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் 'ஆர்டர்' கொடுத்து வாங்குகிறார்கள். வீணை தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக சங்கமும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏவுகணை விஞ்ஞானியான மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இசையின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருக்கு வீணை வாசிக்கும் பழக்கம் உண்டு. அவரிடம் ஒரு பழமையான வீணை இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வீணையை அவர் வாசிப்பது வழக்கம்.

* ஜெமினி கணேசன்-சவுகார்ஜானகி நடிப்பில் 1961-ல் வெளியான 'பாக்கியலட்சுமி' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் உருவான 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடல் ரசிகர்களை மயக்கியதில், சுசீலாவின் குரலுடன் வீணைக்கும் முக்கிய பங்கு உண்டு.

* 1966-ல் வெளிவந்த 'சரஸ்வதி சபதம்' படத்தின் அறிமுக காட்சியில் இடம் பெற்ற வீணை இசையுடன் கூடிய 'கோமாதா என் குலமாதா' என்ற பாடல் காலத்தால் அழியாதது.

* 1972-ல் வெளியான 'அகத்தியர்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனும், டி.எம்.சவுந்தரராஜனும் இணைந்து பாடிய 'வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்' பாடலிலும், அதே ஆண்டில் 'வசந்தமாளிகை' படத்தில் இடம்பெற்ற 'கலைமகள் கைப்பொருளே' பாடலிலும் வீணை இசை முக்கிய பங்கு வகித்தது.


Next Story