தன்னிறைவு கிராமம்


தன்னிறைவு கிராமம்
x

விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள கூர்மா என்ற இந்தக் கிராமமே நவீன வாழ்க்கை முறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வழிகாட்டியாக மாறி இருக்கிறது.

ஆந்திராவில் கிராமம் ஒன்று நவீன வசதிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. மலைகளுக்கு அருகில், காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு இணையம், தொலைக்காட்சி, தொலைபேசி என்று எதுவும் இல்லை. மின்சாரம் கூட கிடையாது. விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள கூர்மா என்ற இந்தக் கிராமமே நவீன வாழ்க்கை முறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வழிகாட்டியாக மாறி இருக்கிறது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூர்மா கிராமத்தில் 50 வீடுகள் வரை உள்ளன. சிலர் தங்களது குடும்பங்களுடன் இருக்கிறார்கள். சிலர் தனியாகவும் வசிக்கின்றனர். பாரம்பரிய மற்றும் ஆன்மிக வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு இல்லை.

'உணவு, தங்குமிடம், உடை' ஆகியவை இயற்கை வழியில் பெறப்படுகின்றன. கையால் அரைத்த அரிசி, உடுக்க தேவையான துணிகளை தறியில் நெய்து கொள்ளுதல் என்று தன்னிறைவு பெற்ற கிராமமாக கூர்மா திகழ்கிறது. அருகிலுள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் இருந்தாலும், இங்கு இயற்கை விளக்குகளை மட்டுமே மக்கள் பயன்படுத்துகின்றனர்.

"மின்சார இணைப்பு ஏற்படுத்தி கொடுத்தால், வசதிகள் பெருகும். அவற்றுக்காக பணம் செலவழிக்க வேண்டும். பணம் சாம்பாதிக்க மீண்டும் வாழ்க்கையின் சலசலப்புக்குப் பழக வேண்டும். அதனால்தான் நாங்கள் அந்த வசதிகளில் இருந்து விலகியுள்ளோம். இந்த அணுகுமுறை எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

வயல்வெளிகளில் காய்கறிகளை பயிரிட்டு, தேவையான பொருட்களை பண்டமாற்று செய்து கொள்கிறார்கள். அனைத்து வீடுகளும் சுட்ட மண் ஓடுகள், பனை ஓலைகளால் ஆனவை. சிமெண்ட் பயன்படுத்தப்படுவது இல்லை.

முன் அனுமதி பெற்றுத்தான் வெளியாட்கள் கிராமத்தில் தங்க முடியும். புதிதாக கட்டப்படும் வீடுகளில், கட்டட வேலைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். அவர்கள் கட்டட வேலைக்காரர்களாகப் பணி செய்ய வேண்டும் என்பது விதி.


Next Story