போக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிஷன்

போக்ஸ்வேகன் நிறுவனத் தயாரிப்புகளில் டைகுன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக இதில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தி அனிவர்சரி எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
2021-22-ம் ஆண்டில் மிகச் சிறந்த எஸ்.யு.வி. ரகமாக இது தேர்வு செய்யப்பட்டதன் வெளிப்பாடாக இப்போது அனிவர்சரி எடிஷன் அறிமுகமாகியுள்ளது.
இந்த அனிவர்சரி மாடலில் 11 புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. முகப்பு விளக்கு, கதவு கைப்பிடி, கருப்பு மேற்கூரை ரெயில், கதவு முனை பாதுகாப்பு பகுதி, ரியர் வியூ கண்ணாடியில் கருப்பு மேல் பாகம், ஜன்னல்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நீலம், மஞ்சள் மற்றும் செர்ரி சிவப்பு நிறங்களில் இது கிடைக்கும்.
இதில் 40-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.), ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), பாதுகாப்பான பயணத்துக்கு 6 ஏர் பேக், பல முனை மோதல் தவிர்ப்பு பிரேக் வசதி, ரிவர்ஸ் கேமரா, குழந்தைகளுக்கான ஐ-சோபிக்ஸ், டயர் காற்றழுத்தம் மற்றும் வெடிப்பு ஏற்படுத்துவதை எச்சரிக்கும் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் உள்ளன. இது ஒரு லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின், 6 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. 115 பி.எஸ். திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் இது வெளிப் படுத்தும். இதில் மற்றொரு மாடல் 1.5 லிட்டர் என் ஜினைக் கொண்டது.
இதில் 6 கியர் மற்றும் 7 கியர் கொண்ட மாடல்கள் உள்ளன. இதில் ஆக்டிவ் சிலிண்டர் தொழில் நுட்பம் (ஏ.சி.டி.) பயன் படுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் என்ஜின் மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17.23 கி.மீ தூரமும், 1.5 லிட்டர் மாடல் 17.88 கி.மீ. தூரமும் சோதனை ஓட்டத்தில் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






