146 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை மாற்றம்


146 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை மாற்றம்
x

வானிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் மாதங்களிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர் காலம் ஜனவரி மாதத்தில் மெல்ல முடிவுக்கு வரும். பிப்ரவரி மாத தொடக்கத்திலும் குளிரின் தாக்கம் வெளிப்படும். படிப்படியாக வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கும். எனினும் மே மாதத்தை ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் குளிரும், வெயிலும் கலந்த சூழலால் வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

ஆனால் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29.54 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும் தொட்டிருக்கிறது. அதாவது 1877-ம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் கடும் வெப்பம் நிலவி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் மாதங்களிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மற்றும் மே மாதங்களில் நிலவும் வெப்பநிலையை சமாளிக்க மக்கள் தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 29.48 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு 29.54 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துவிட்டது.

1986-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பகல் நேரத்தில் வெப்பநிலை 0.63 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.அதுபோல் இரவிலும் 0.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், 2100-ம் ஆண்டு வாக்கில், பகலில் 4.7 டிகிரி செல்சியஸ் முதல் 5.5 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை உயரும் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நூற்றாண்டின் இறுதியில், கோடைகாலத்தில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை 3 முதல் 4 வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையத்தின் ஆய்வுப் படி, இந்தியாவில் சில ஆண்டுகளாக சராசரி வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் சராசரி வெப்பநிலை இயல்பை விட 0.51 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு 2021-ல் வெப்பநிலை 0.44 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 2009-ல், வெப்பநிலை இயல்பை விட 0.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 2010-ம் ஆண்டு (0.53 டிகிரி செல்சியஸ்), 2016-ம் ஆண்டு ( 0.71 டிகிரி செல்சியஸ்), 2017-ம் ஆண்டு (0.71 டிகிரி செல்சியஸ்) என வெப்பநிலை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

உலக வங்கியின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரி வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி அதிகரிக்கும் என்பதால், இந்தியா ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

புவி வெப்பமடைவதுதான் வெப்பநிலை உயர்வுக்கு காரணம். உலக அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகி வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் மனித குலத்திற்கு அது பெரும் அச்சுறுத்தலாக மாறும். பல உயிரினங்கள் அழிந்து போகக்கூடும். பனிக்கட்டிகளில் நன்னீர் இருப்பதால் அது கடலில் சேரும்போது கடல் நீரின் உப்புத்தன்மை குறையத் தொடங்கும்.

இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் உணவு உற்பத்தியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.


Next Story