விசித்திரமான விளையாட்டு போட்டிகள்


விசித்திரமான விளையாட்டு போட்டிகள்
x

உலகம் முழுவதும் விசித்திரமான விளையாட்டு போட்டிகள் நிறைய இருக்கின்றன.



பொங்கல் பண்டிகையின்போது விளையாட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். அவற்றுள் ஒருசில போட்டிகள் விசித்திரமாக அரங்கேறும். அதுபோல் உலகம் முழுவதும் விசித்திரமான விளையாட்டு போட்டிகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

மனைவியை தூக்குதல்

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடுவதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம். இந்த பந்தயம் பின்லாந்தில் 1992-ம் ஆண்டு உதயமானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் தங்கள் மனைவியை முதுகில் சுமந்தபடி ஓட வேண்டும். போட்டி இலக்கை எட்டுவதற்குள் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அந்த தடைகளை மனைவியை தூக்கிய நிலையிலேயே கடக்க வேண்டும்.

அந்த சமயத்தில் யாராவது கை நழுவி மனைவியை கீழே தவறவிட்டாலோ, தூக்கிக்கொண்டு ஓட முடியாமல் போனாலோ இலக்கை எட்டும் நேரத்தில் இருந்து 15 விநாடிகள் கழிக்கப்படும். இதில் முதலாவது சென்று இலக்கை எட்டிப்பிடிக்கும் போட்டியாளருக்கு, அவரது மனைவியின் எடைக்கு சமமான அளவு பியர் பானம் வழங்கப்படும்.

ஒட்டக பந்தயம்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேடுகள், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் ஒட்டக பந்தயம் பிரபலமாக விளையாட்டாக நடத்தப்படுகிறது. ஒட்டகம் மெதுவாக நடப்பதைத்தான் பலரும் பார்த்திருப்பார்கள்.

ஆனால் ஒட்டகங்களால் ஒரு மணி நேரத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். குதிரையை போலவே இதுவும் சீறிப்பாய்வதை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.

குதிரை மாரத்தான்

வேல்ஸ் நாட்டில் நடத்தப்படும் சாதாரண மாரத்தான் போட்டிதான் இது. ஆனால் போட்டியாளருக்கு எதிராக குதிரைதான் போட்டி போடும். குதிரையில் அமர்ந்து சவாரி செய்தபடி ஒருவர் போட்டியில் பங்கேற்பார். மற்றொருவர் குதிரையோடு போட்டிப்போட்டபடி ஓடுவார். இருவரில் யார் ஜெயிப்பார்என்பதுதான் சுவாரசியமானது. பொதுவாக இந்த போட்டிகளில் குதிரைதான் வெற்றி பெறும். இரண்டு முறை மட்டுமே மனிதர்கள் வெற்றிவாகை சூடி உள்ளனர்.

சுழலும் நாற்காலி பந்தயம்

அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தும் சுழலும் நாற்காலிகளை கொண்டு நடத்தப்படும் இந்த போட்டியில் இரு வேறு அணிகளாக பங்கேற்பார்கள். ஒரு அணியில் 3 பேர் இடம் பிடித்திருப்பார்கள். பின்னோக்கி நாற்காலியை நகர்த்தியபடி 200 மீட்டர் வரையிலான தொலைவை சுற்றி வர வேண்டும்.

எந்த அணி அதிக சுற்றுக்களை முடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் கால்களை தரையில் படபடவென அடித்தபடி நாற்காலியை நகர்த்துவதும், அவசர கதியில் பின்னோக்கி சுழல முயன்று கீழே விழுவதும் போட்டியை சுவாரசியமாக்கிவிடும்.

சதுரங்க குத்துச்சண்டை

குத்துச்சண்டை, சதுரங்கம் இரண்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும். முதல் சுற்றில் ஆக்ரோஷமாக சண்டையிடும் போட்டியாளர்கள், அடுத்த சுற்றில் ஆசுவாசமாக அமர்ந்து சதுரங்கம் விளையாடுவார்கள். போட்டியாளர்களின் மனதை ஒருங்கிணைக்கும் விதமாகவும், ஒழுக்கத்தை பின்பற்றும் வகையிலும் இரு போட்டிகளையும் ஒன்றிணைத்து நடத்துகிறார்கள். ஆக்ரோஷம், அமைதியான சூழல் இரண்டையும் ஒருசேர கண்டு களிக்கும் நிகழ்வு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

ஒட்டகம் மீது தாவி குதித்தல்

ஏமன் நாட்டில் வசிக்கும் ஜரானிக் பழங்குடியின மக்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி இது. நம்மூரில் குனிந்து நிற்பவர் மீது மற்றொருவர் தாவி குதிக்கும் 'பச்ச குதிரை' போட்டி போல ஒட்டகத்தின் மீது தாவி குதிக்க வேண்டும். இரண்டு, மூன்று ஒட்டகங்களை வரிசையாக நிற்க வைத்து அதன் மீது தாவிக்குதிக்க வேண்டும். இது போட்டியில் பங்கேற்பவரின் வேகம், வலிமை, விவேகம் போன்றவற்றை தீர்மானிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

1 More update

Next Story