பழங்குடியினர் விரும்பும் டாக்டர்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த டாக்டர் ரத்தன் சந்திரகர் அந்தமானின் ஜராவாஸ் பழங்குடியினருக்கு பல ஆண்டுகள் மருத்துவம் செய்து வருகிறார். அவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது.
இது குறித்து டாக்டர் ரத்தன் கூறும்போது, ''நமது பணி அங்கீகரிக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. குடியரசு தலைவர் கையில் விருது பெறுவது நிச்சயம் நல்ல அனுபவம்தான். பத்மபூஷன் விருதுப் பட்டியலில் என் பெயர் இடம்பெற்றுள்ளதை அறிந்து நானும் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தோம்.
சாகசமான விஷயங்களை செய்வது எனக்குப் பிடிக்கும். அந்தமானுக்கு சென்று பழங்குடியின மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தேன். ஆரம்பத்தில் அவர்களுடன் பழகுவது மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களது மொழியை கற்ற பிறகு, என் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு போர்ட்பிளேயரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள கடம்தலா மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டேன்.
அவர்களது மொழியை 5 மாதங்களிலேயே பேசக் கற்றுக் கொண்டேன். அந்த மருத்துவமனையில் 5 ஆண்டுகள் பணியாற்றினேன். தங்கள் கிராமத்தில் யாரையும் தங்குவதற்கு ஜராவாஸ் பழங்குடியின மக்கள் அனுமதிப்பதில்லை. கிராமங்களுக்குச் செல்லும் போலீசாரும், டாக்டர்களும் வேலை முடிந்ததும் திரும்பி விடுவர். இன்றும் அவர்கள் என்னை விசாரித்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.






