இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கொண்டாடும் உப்பு ஏரி..!


இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கொண்டாடும் உப்பு ஏரி..!
x

சர் கிரீக், அரபிக் கடலில், குஜராத் எல்லையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்லிசாக ஓடும் உப்புநீர் கழிமுகப் பகுதி.

பார்க்க பிரமாண்டமான ஆறு போலவே 96 கி.மீ. தூரத்துக்கு நீண்டிருக்கும் இந்த சர் கிரீக், உண்மையில் நீலக் கடலில் இருந்து பிரிந்து வந்த நீளக்கடல். இத்தனை நீளம் இருந்தாலும் இதன் அகலம் வெறும் எட்டு கிலோமீட்டர்தான். இந்தக் கரைக்கு வந்தால் இந்தியாவில் குஜராத்தின் கட்ச் பகுதி. அந்தக் கரைக்குப் போனால் பாகிஸ்தானின் சிந்து மாகாணம்.

யாருக்கு சொந்தம்?

இந்த ஏரி யாருக்குச் சொந்தம் என்பது சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கிறது. வெறும் உப்புத்தண்ணீர்தானே என்று இதை விட்டுக் கொடுத்தால் போகப் போக தங்கள் நிலமும் ஆக்கிரமிக்கப்படும் என்று இரு நாடுகளுமே நினைக்கின்றன. அதோடு, அள்ள அள்ளக் குறையாத மீன் வளம் கொண்ட இந்தக் குட்டிக் கடல், இரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு தொழில் ஆதாரமாக இருக்கிறது. அதோடு இங்கு கடலுக்கு அடியில் ஏராளமான இயற்கை எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பதால் இருநாடுகளும் உரிமை கோருகின்றன.

சர்ச்சை

1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்த சர்ச்சை பெரிதாக வெடித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1924-ம் ஆண்டில், அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பம்பாய் மாகாணத்துக்கும், சிந்து மாகாணத்துக்கும் எல்லையை நிர்ணயிப்பதற்காக இந்தக் கழிமுகத்தின் நடுப்பகுதியில் 46 இடங்களில் தூண்களை நிறுவினர். இதையே எல்லையாகக் குறிப்பிட்ட இந்தியா, ''கரையிலிருந்து 4 கி.மீ தூரம் வரை-அதாவது இந்தத் தூண்கள் வரை எங்க ஏரியா. அங்கிருந்து அந்தப் பக்கம் 4 கி.மீ. பாகிஸ்தானுடையது'' என்றது. ஆனால் முழு ஏரியாவும் வேண்டும் என்கிறது பாகிஸ்தான். இந்தியா- பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் தவறாமல் இடம்பெறும் விஷயமாகி இருக்கிறது, சர் கிரீக்!

ஆபத்து

இப்படி உரிமை கொண்டாடினாலும், பாகிஸ்தான் ராணுவம் இந்த ஏரியாவில் ரோந்து வருவதில்லை. நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படைதான் இங்கு பாதுகாப்புப் பணியை செய்கிறது. இது ரொம்பவே ஆபத்தான ஏரி. ஆழங்களும், ஆபத்தான அலைகளும் சுருட்டி இழுத்துக்கொள்ளும் சுழல்களும் நிறைந்த நீர்ப்பகுதி. கொந்தளிக்கும் தண்ணீரால் நீருக்கடியில் திடீர் திடீர் என மணல் மேடுகள் உருவாகுமாம்.

ரோந்துப் படகுகள் அதில் சிக்கிக் கொண்டால், காப்பாற்றுவதற்குக் கூட எந்தப் படகும் பக்கத்தில் வரமுடியாதாம். இது தவிர இரு கரைகளிலும் அடர்த்தியான மாங்குரோவ் காடுகள், அதில் வாழும் முதலைகள், நீர் வெளியெங்கும் பரவியிருக்கும் நச்சுப் பாம்புகள், விஷப் பூச்சிகள் என்று தொட்ட இடமெல்லாம் ஆபத்துதான். மணல் திட்டுக்களில் சிக்காதபடி அடிப்பகுதி தட்டையான படகுகளை வடிவமைத்து நமது வீரர்கள் அங்கே ரோந்து வருகிறார்கள். பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால், அதட்டி விரட்டுகிறார்கள்.

இந்தியாவும் இல்லை... பாகிஸ்தானும் இல்லை... இப்போதைக்கு இங்கே இயற்கையின் ஆட்சிதான் நடக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் இந்த ஏரியாவில் ரோந்து வருவதில்லை. நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படைதான் இங்கு பாதுகாப்புப் பணியை செய்கிறது.


Next Story