மெட்டிக்கும், வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்?


மெட்டிக்கும், வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்?
x

வெள்ளி உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடியது. பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சி நம் உடலுக்கு அனுப்பும் திறன் வெள்ளிக்கு உண்டு.

திருமணத்தின்போது நடக்கும் சடங்குகளில் ஒன்று, மெட்டி அணிவது. இது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது. ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிப்பிடும் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. தமிழில் மெட்டி, இந்தியில் பிச்சியா, தெலுங்கில் மெட்டலு, கன்னடத்தில் ஹல்-உங்குரா என நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் காலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆபரணமாகவும் கருதப்படுகிறது. இரண்டு கால்களிலும் இரண்டாவது விரலில் ஜோடியாக அணியப்படுகிறது. தற்போது பெண்களின் ரசனைக்கேற்ப நவீன டிசைன்களில் மெட்டிகள் வடிவமைக்கப்படுகின்றன. மெட்டிகள் பொதுவாக வெள்ளி உலோகத்தில் தயார் செய்யப்படுகின்றன. அதனை அணிவதன் பின்னணியில் பழமையும், பாரம்பரியமும் மட்டுமின்றி அறிவியல் ரீதியான காரணங்களும் இருக்கின்றன.

மெட்டியின் பின்னணியில் உள்ள வரலாறு

இரண்டாவது கால்விரலின் நரம்பு, கருப்பையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதன் விளைவாக, பெண்கள் கால் விரலில் மெட்டி அணிவது கருப்பையில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். மேலும் மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலியல் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டும். கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை போன்ற முக்கிய உறுப்புகளின் செயல் திறனையும் தூண்டிவிடும் என்று கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள், ஒருவரின் 'பிராணா சக்தி' (உடலின் முக்கிய ஆற்றல்) சமநிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்தனர். ஒருவரின் அனைத்து 'பிராண' பாதைகளும் கால்விரல்கள் வழியாகவே செல்கின்றன என்றும் கருதப்படுகிறது. இதன் விளைவாக, கால்விரலில் மெட்டி அணிவது பெண்ணின் உயிர் சக்தி சமநிலையை பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

வெள்ளியில் ஏன் அணிய வேண்டும்?

வெள்ளி உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடியது. பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சி நம் உடலுக்கு அனுப்பும் திறன் வெள்ளிக்கு உண்டு. இந்த ஆற்றல் நமது உடல் வழியாக கடத்தப்படும்போது முழு உடல் அமைப்பையும் புதுப்பிக்க உதவும். புராணங்களின்படி, வெள்ளியில் மெட்டி அணிவது, தாம்பத்தியத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலியை போக்கவும் துணை புரியும்.

தங்கத்தில் ஏன் மெட்டி அணிவதில்லை?

நமது மரபுகள் படி தங்கத்தை ஒருபோதும் இடுப்புக்கு கீழே அணியக்கூடாது. அப்படி அணிவது செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்கு அவமரியாதையாக அமையும் என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக தங்கத்தை தவிர்த்து வெள்ளியில் மெட்டிகள் வடிவமைக்கப்படுகின்றன.


Next Story