வாட்ஸ் அப்பில் 'வாய்ஸ் நோட்ஸை' ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்- வெளியான தகவல்


வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்- வெளியான தகவல்
x

Image courtesy: PTI  

'வாய்ஸ் நோட்ஸ்களை' ஸ்டேடஸ் ஆக வைக்கும் புதிய அப்டேட்டிற்கு மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன்,

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் "கம்யூனிட்டிஸ்" என்ற புதிய வசதியை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதாவது வாட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை "கம்யூனிட்டிஸ்" கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் "என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்" மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறி இருந்தார்.

இந்த நிலையில் வாட்ஸ் அப் பயனர்கள் படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே ஸ்டேட்டஸ்களாகப் பகிர்ந்து வரும் நிலையில் வாட்ஸ்- அப்பில் நமது 'வாய்ஸ் நோட்ஸ்களை' ஸ்டேடஸ் ஆக வைக்கும் புதிய அப்டேட்டிற்கு மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடியோ ஸ்டேட்டஸ்களை போன்றே வாய்ஸ் நோட்ஸ்களையும் அதிகபட்சமாக 30 நொடிகள் வரை வைக்கும் வசதி அறிமுகப்படுத்த இருப்பதாக 'வாபீட்டாஇன்போ" தெரிவித்துள்ளது. இது வாட்ஸ் அப் வெளியிடும் புதிய அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு வருகிறது இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி இருப்பினும் மெட்டா நிறுவனம் இது குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை.

1 More update

Next Story