சக்கர நாற்காலியில் மலைச்சிகரம் ஏறி அசாத்திய சாதனை! மார்ட்டின் ஹிபர்ட்


சக்கர நாற்காலியில் மலைச்சிகரம் ஏறி அசாத்திய சாதனை! மார்ட்டின் ஹிபர்ட்
x

உலகின் உயரமான மலைச்சிகரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு சாதனை பட்டியலில் இடம் பிடிப்பவர்கள் மத்தியில் தனித்துவமானவராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார், மார்ட்டின் ஹிபர்ட்.

மலையேற்றம் மேற்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களே பனி படந்த மலைச்சிகரங்களின் உச்சி பகுதிக்கு சென்றடைவது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் சக்கர நாற்காலியில் பயணித்த படியே ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோவின் உச்சி பகுதியை சென்றடைந்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் கிளிமஞ்சாரோவுக்கு செல்வதற்கு இலக்கு நிர்ணயித்து மலையேற தொடங்குபவர்களில் 65 சதவீதம் பேரே உச்சி பகுதி வரை செல்கிறார்கள் என்ற நிலையில் மார்ட்டின் ஹிபர்ட்டின் முயற்சி பலரையும் பிரமிக்க வைத்துவிட்டது.

45 வயதாகும் மார்ட்டின் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு விபத்தில் சிக்கி பாதிப்புக்குள்ளானவர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் அரினா பகுதியில் நடந்த அந்த குண்டு வெடிப்பில் 22 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுள் மார்ட்டினும் ஒருவர். குண்டுவெடிப்பின்போது மார்ட்டினின் முதுகு தண்டுவடம் கடும் பாதிப்புக்குள்ளானது. இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் செயலிழந்து போனது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இனி நடக்கவே முடியாது என்று முத்திரை குத்தப்பட்டார். மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார். ஆனாலும் மனமுடைந்து போகவில்லை. சக்கர நாற்காலியின் துணையுடன் சுழல பழகியவர் இன்று கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏறி சாதித்துவிட்டார். 5,895 மீட்டர் உயரமுள்ள இந்த மலை சிகரத்தை தனது உதவியாளர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகளின் துணையுடன் ஏறி சாதனையாக மாற்றிவிட்டார்.

பக்கவாத பாதிப்புக்குள்ளான நபர்களுள் இத்தகைய உயரமான மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகிவிட்டார். முதுகு தண்டுவட காயத்தால் அவதிப்படுபவர்களின் நலன் காக்கும் அமைப்புக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் இந்த பயணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கிளிமஞ்சாரோ மலைச்சிகரத்தை எட்டிவிட்ட பூரிப்பு அவர் பதிவு செய்து வெளியிட்ட வீடியோவில் வெளிப்பட்டது. ''இதோ, நாங்கள் கிளிமஞ்சாரோவின் உச்சியில் இருக்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் மருத்துவமனையில் இருந்தேன். என்னால் நகர கூட முடியவில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கிளிமஞ்சாரோவின் உச்சியில் நிற்பது அற்புதமான உணர்வு. கனவு காணுங்கள். அதன் மீது நம்பிக்கை வையுங்கள். சாதிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள். நான் மக்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான். உடல் உறுப்பு செயல்படாமல் முடங்கிய நபராக இந்த சாதனையை படைத்ததில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்'' என்கிறார்.


Next Story