இளம் வயது மாரடைப்புக்கு காரணம்?


இளம் வயது மாரடைப்புக்கு காரணம்?
x

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே நிறைய பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஒருவர் உடலில் தென்படுவதும் முக்கிய காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

'பிரீ டயாபட்டீஸ்' என்று அழைக்கப்படும் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும். பிரீ டயாபட்டீஸ் என்பது ஒருவரின் உடலில் ரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்பாகும். அதாவது 100 முதல் 125 மி.கி/டி.எல் வரை ரத்த சர்க்கரை இருந்தால் அது டைப் -2 நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய சர்க்கரை அளவு கொண்ட இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 1.7 மடங்கு அதிகம் இருப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் அகில் ஜெயின் கூறுகையில், ''இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சூழல் அதிகரித்து வருவதற்கான காரணங்களை ஆய்வு செய்தோம். நீரிழிவு நோயின் முந்தைய நிலைக்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எதிர்காலத்தில் இதய நோய் அதிகரிப்பதற்கு நீரிழிவு நோய்க்கு ஆரம்ப நிலை முக்கிய காரணியாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. ஆய்வின் படி பிரீ டயாபட்டீஸ் நிலையில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2.15 சதவீதமாக இருக்கிறது. ஆனால் சாதாரண ரத்த சர்க்கரை அளவு கொண்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 0.3 சதவீதமாக உள்ளது'' என்கிறார்.

பிரீ-டயாபட்டீஸ் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் மோசமான இதய நோய் பாதிப்புகள் அல்லது பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழல் தற்போது இல்லை.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது, மன அழுத்தம் இன்றி இருப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பித்துவிடலாம்'' என்றும் சொல்கிறார்.


Next Story