அலுவலகப் பணியும்.. குழந்தை பராமரிப்பும்..!

அலுவலகப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவாலான விஷயமாக இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளை யாராவது ஒருவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுத்தான் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி குழந்தை தன்னுடைய அரவணைப்பில் வளரமுடியாத சூழலில் நிறைய பேர் வேலையை விட்டுவிடுகிறார்கள்.
சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளை வீட்டிலோ, குழந்தை பராமரிப்பு மையத்திலோ ஒப்படைத்துவிட்டு பணிக்கு செல்கிறார்கள். குழந்தைகளை தங்களுடனேயே கொண்டு சென்று பணிக்கு மத்தியில் குழந்தைகளை பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதுபோன்ற அனுமதி பணி இடத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கிடைப்பதில்லை.
சமீபத்தில் சமூகவலைத்தள பக்கத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் மும்பையை சேர்ந்த ராதிகா குப்தா என்பவர், தனது குழந்தையை அலுவலகத்தில் தன்னுடன் வைத்திருந்து பராமரிக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அதில் ''பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில், குழந்தையை கவனித்துக்கொள்ள உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் இருவரில் யார் வேலைக்கு செல்வார் என்று யூகிக்கிறீர்களா? என்னிடம், அம்மா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற நிலையில் எப்படி வாழ்க்கையை நிர்வகிக்கப் போகிறாய் என்று அடிக்கடி கேட்கிறார்கள். கொஞ்சம் திட்டமிடல், நிறைய பொறுமை, சிக்கல்களை தீர்க்கும் அணுகுமுறை போன்ற விஷயங்களை செயல்படுத்தினால் போதும். குழந்தையின் சிரிப்பு மற்றதை செய்துவிடலாம்'' என்றும் பதிவிட்டிருந்தார்.
பெரிய தரை விரிப்பில் குழந்தை பொம்மைகளுக்கு மத்தியில் புன்னகைத்த நிலையில் போஸ் கொடுக்கும் அந்த புகைப்படம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேவேளையில் ராதிகா குப்தாவின் கருத்து கலவையான விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
அலுவலகப் பணி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டிலும் ராதிகா குப்தாவின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டினாலும், கீழ்மட்ட பதவிகளில் உள்ளவர்கள் இதேபோன்ற சலுகைகளை பெறமுடிவதில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
''தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு கிடைக்கும் சலுகைகளில் இதுவும் ஒன்று. மற்ற பணியாளர்களுக்கு இத்தகைய சலுகைகள் கிடைபதில்லை. வீட்டையும், வேலையையும் சமமாக நிர்வகிப்பதற்கு சிரமப்படுவார்கள். இத்தகைய சுமையை பொதுவாக பெண்களே சுமக்கிறார்கள்'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
''இதுபோன்ற சலுகை உயர் நிர்வாக மட்டத்தில் மட்டுமே கிடைக்கும். வேலைக்கு செல்லும் சராசரி தம்பதிகள் விடுமுறைதான் எடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய ஏற்றுக்கொள்ளல் எல்லா மட்டத்தில் இருப்பவர்களுக்கும் தேவையானது'' என்று பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
''குழந்தைகளை பணியிடத்திற்கு அழைத்து வருவதற்கு நிறுவனங்கள் இத்தகைய வாய்ப்பை வழங்காத வரை, தம்பதிகள் பணி புரிவது கடினமானது'' என்பது மற்றொரு பெண்ணின் கருத்தாக இருக்கிறது.






