உலகின் 'டாப்-5' சுற்றுலாத் தலங்கள்

உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக் கூடிய முதல் ஐந்து இடங்கள் எவை? அதைத்தான் இங்கே தொகுப்பாய் காணப் போகிறோம்.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசிக்கக்கூடிய இடத்தில் முதலாவதாக இருப்பது, தாஜ்மஹால். ஆனால் அதுவே உலக அளவில் இது 50-வது இடத்தில் இருக்கிறது. அப்படியானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய முதல் ஐந்து இடங்கள் எவை...? என்பதைதான் இங்கே காண இருக்கிறோம்.
1. கிராண்ட் பஜார், துருக்கி
துருக்கியில் உள்ள இதுதான் உலகிலேயே அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. பெயித் மாவட்டத்தில் பண்டைய காலத்தில் 'கான்ஸ்டான்டி நோபிள்' என அழைக்கப்பட்ட இன்றைய இஸ் தான்புல்லில் கிராண்ட் பஜார் உள்ளது. இது 1455-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1730-ல் முடிந்தது.
துருக்கிய மொழியில் இதை (Kapali Carsi) கபாலி கர்சி என்றும் பய்யூக் கர்சி என்றும் அழைப்பர். இதற்கு முறையே மேற்கூரை போடப்பட்ட பஜார், பெரிய கடை வீதி என்று பொருளாகும். உலகிலேயே மேற்கூரை வேயப்பட்ட மிகப்பெரியதும் பழமையானதுமான கடைத்தெரு இதுதான்.
இங்கு மேற்கூரை வேயப்பட்ட 61 தெருக்களில் சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு ஜவுளி வர்த்தகம் நடைபெற்றது. இப்போது இங்கு விலையுயர்ந்த நகைகள் முதல் இனிப்புகள் வரை சகலமும் கிடைக்கும். பேரம் பேசியும் வாங்கலாம். இங்கு ஆண்டுதோறும் 91,250,000 மக்கள் வருகின்றனர். சமீபத்திய பூகம்ப பேரழிவிற்கு பிறகு, வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.
2. ஸோகாலோ, மெக்ஸிகோ
மெக்ஸிகோ நாட்டுத் தலைநகர் மெக்ஸிகோ நகரில் உள்ள சதுக்கம் ஸோகாலோ. இதற்கு ஸ்பானீஷ் மொழியில் கடைக்கால் என்று பொருள். 240 மீட்டர் நீளமும், 240 மீட்டர் அகலமும், 57,600 சதுர மீட்டர் பரப்பும் கொண்ட இந்த சதுக்கம், உலகிலேயே மிகப்பெரிய நகர சதுக்கம். இது அரசியல் சாசன சதுக்கம் (constitutional) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. ஆம்...! மெக்ஸிகோவின் அரசியல் சாசனம் 1812-ல் ஸ்பெயினில் கையெழுத்தானபோது, இங்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதுண்டு. மேலும் மெக்ஸிகோவின் சுதந்திர நினைவுச் சின்னம் நிறுவ திட்டமிட்டு, இங்கு கடைக்கால் மட்டும் கட்டப்பட்டது. அதற்கு மேல் எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை என்றாலும், இந்த பிரமாண்ட சதுக்கத்தை சுற்றியிருக்கும் பிரபல இடங்களால், இது புகழ்பெற்றது.
சதுக்கத்தின் வடக்கே மாநகர பெரும் தேவாலயமும், கிழக்கே தேசிய அரண்மனையும் உள்ளது. தெற்கே பெடரல் மாவட்ட கட்டிடமும், வடமேற்கே பழைய கோட்டையும், வடகிழக்கில் டெம்ப்லோ கட்டிடமும் உள்ளன.
கற்களால் உருவான 124 பெஞ்சுகளும், 64 விளக்குகளும் இங்கு உள்ளன. இங்கு தினசரி மெக்ஸிகோ நாட்டுக் கொடி காலையில் ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை 85 கோடி ஆகும்.
3. டைம்ஸ் சதுக்கம், அமெரிக்கா
டைம்ஸ் சதுக்கம் நியூயார்க் நகரில் உள்ளது. 1904-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் தலைமையகத்தை இங்கு மாற்றிய பிறகு இது டைம்ஸ் சதுக்கம் என்ற பெயரினைப் பெற்றது. இங்கு டூஃபி சதுக்கம் மற்றும் மைக்கேல் சிலை ஆகியவை பிரபலம். உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்கு வர்த்தக மையமாக இது திகழ்கிறது.
உலகின் குறுக்கு தெருக்கள் (CROSS ROADS OF THE WORLD) என இவை சிறப்பித்து அழைக்கப்படுகின்றன. 1907-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு 5 கோடி பேர் இவ்விடத்திற்கு வந்து செல்கிறார்கள்.
4. சென்ட்ரல் பார்க், அமெரிக்கா
நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் ஒரு நகரப் பூங்காவாகும். மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இது 1857-ல் நிறுவப்பட்டது. இயற்கைக் காட்சிகள், நீர்நிலைகள் சூழ்ந்துள்ள இதைக் காண ஆண்டுதோறும் 4 கோடி மக்கள் வருகின்றனர்.
5. வாஷிங்டன் டி.சி யூனியன் ஸ்டேஷன், அமெரிக்கா
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள யூனியன் ஸ்டேஷன் ஒரு சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் ஆகும். 1976 மார்ச் 27-ல் தொடங்கப்பட்ட இதை ஆண்டுதோறும் 4 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். பல நாட்டவர்கள், பார்த்து ரசிக்கிறார்கள்.






