கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு, மரங்கள் விழுந்தன -போக்குவரத்து பாதிப்பு


கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு, மரங்கள் விழுந்தன -போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2023 12:30 AM IST (Updated: 24 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.

மூங்கில்கள் சரிந்தது

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 2 மணிக்கு கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் சூண்டி ஒத்தக்கடை பகுதியில் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து காலை 6 மணிக்கு ஓவேலியில் இருந்து கூடலூருக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மூங்கில்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் குறுக்கே கிடந்த மூங்கில்களை அகற்றும் பணி நடைபெற்றது. அதன் பின்னரே காலை 9 மணிக்கு போக்குவரத்து சீரானது.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் தொடர் மழையால் பெரிய சூண்டி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் உள்ளது. தொடர்ந்து கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் நெலாக்கோட்டை அருகே நேற்று மதியம் 2 மணிக்கு மூங்கில் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மூங்கில்களை அகற்றினர். அதன் பின்னர் 3.30 மணிக்கு பிறகு வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

இதனிடையே பல இடங்களில் மரங்கள் மற்றும் அதன் கிளைகள் முறிந்து விழுவதால் ஓவேலி உள்பட பல்வேறு கிராமங்களில் மின்சார வினியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.


Next Story