அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திட்டச்சேரி:
ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆடிமாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் சீயாத்தமங்கை பெரியத்தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, தேன், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிளக்கு பூஜை
இதேபோல் தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வளையல் அலங்காரம்
இதேபோல் நாகை பால்பண்ணைச்சேரி ஜெயபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.