வால்பாறை தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தைக்குட்டி- வனத்துறையினர் விசாரணை
வால்பாறை தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து சிறுத்தைக்குட்டி கிடந்தது.
வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள கருமலை எஸ்டேட் 1-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை குட்டி அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும், இறந்து கிடந்த சிறுத்தை குட்டியின் உடலை கைப்பற்றி அய்யர்பாடி மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் வெங்கடேஷ் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை டாக்டர் விஜயராகவன் சிறுத்தை குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இறந்தது 8 மாதம் ஆன ஆண் சிறுத்தை குட்டி என்றும் மற்ற வனவிலங்குகளுடன் ஏற்பட்ட சண்டையில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் தேசிய புலிகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுத்தைக்குட்டியின் உடல் எரியூட்டப்பட்டது.