இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி மும்முரம்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்துக்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்துக்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இரும்பு குழாய்கள்
பொள்ளாச்சி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை ஆழியாற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக அம்பராம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு பிரதான குழாய்கள் மூலம் மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு சென்று குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பிளாஸ்டிக்கால் ஆன குடிநீர் குழாய்கள் ஏற்கனவே பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் அடிக்கடி உடைவதால் குடிநீர் வீணாகுகிறது. இதற்கிடையில் அந்த குழாய்களை மாற்றி விட்டு புதிதாக இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நீர் உந்து நிலையங்கள்
அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தினமும் 10.5 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு 9.4 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. குழாய் உடைந்து குடிநீர் வீணாகுவதை தடுக்க சப்-கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து வெங்கடேசா காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை ரூ.14 லட்சம் செலவில் இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதை தவிர மகாலிங்கபுரம், கே.ஆர்.ஜி.பி. நகர் ஆகிய பகுதிகளில் ரூ.48 லட்சம் செலவில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில் 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். இதற்காக ரூ.43 கோடியில் புதிதாக குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
--------------------