அரசு பள்ளியை பெற்றோர் திடீர் முற்றுகை
தியாகதுருகம் அருகே வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கண்டாச்சிமங்கலம்
தொடக்கப்பள்ளி
தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது.
முற்றுகை
மேலும் பள்ளியில் இருந்த புத்தகங்கள், மாணவர்களின் சார்ட்டுகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மழை நீரில் நனைந்தது. இதைப்பார்த்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
இந்த நிலையில் வகுப்பறையில் மழைநீர் தேங்கி நின்ற தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன், வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய கட்டிடம்
அப்போது வகுப்பறையில் மழைநீர் தேங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறினர்.
இதற்கு பழைய கட்டிடத்தை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தற்காலிகமாக மாரியம்மன் கோவில் சாவடி பகுதியில் வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.