பள்ளி விடுதியில் தேநீர் அருந்திய மாணவர்களுக்கு வாந்தி


பள்ளி விடுதியில் தேநீர் அருந்திய மாணவர்களுக்கு வாந்தி
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே பள்ளி விடுதியில் தேநீர் அருந்திய மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பள்ளி விடுதியை ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை,

சுல்தான்பேட்டை அருகே பள்ளி விடுதியில் தேநீர் அருந்திய மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பள்ளி விடுதியை ஆய்வு செய்தார்.

திடீர் வாந்தி

சுல்தான்பேட்டை ஒன்றியம் லட்சுமி நாயக்கன்பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டு உள்ளது. இதனை அருந்திய 13 மாணவர்களுக்கு சில நிமிடங்களிலேயே திடீரென வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டு உளளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாணவர்கள் அனைவரும் விடுதி திரும்பினர். இந்தநிலையில் அந்த பள்ளிக்கு சுல்தான்பேட்டை வட்டார சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கும் உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் உணவு மாதிரி, நீர் மாதிரி பரிசோதனைக்காக சேகரித்தனர்.

கெட்டுப்போன பால்

இந்தநிலையில் நேற்று கோவை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு எவ்வாறு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என விடுதி காப்பாளர், பணியாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, டாக்டர்கள் கிருஷ்ணபிரபு, சூர்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர். மேலும் சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் கெட்டுப்போன பாலில் தேநீர் தயாரித்து வழங்கப்பட்டதால், தேநீரில் புட் பாய்சன் ஏற்பட்டு மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் சுல்தான்பேட்டை, சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story