வாரச்சந்தையில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
வாரச்சந்தையில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரின் வீட்டிலும் ஆட்டு இறைச்சி உணவு சமைத்து சாப்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அமாவாசை தினம் இல்லை என்பதால் அதிகளவில் இறைச்சி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை அதிகளவில் இருக்கும் என வியாபாரிகள் கருதினர். இதற்கேற்ப நேற்று காலை ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அதனை வாங்க பொதுமக்கள் கார்கள், ஆட்டோக்களில் குவிந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட ஆட்டின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் வியாபாரிகளும், பொதுமக்களும் அவற்றை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில மணி நேரத்தில் ரூ.75 லட்சத்தை தாண்டி ஆடுகள் விற்பனையானது. ராமநாதபுரம் வாரச்சந்தையில் 10 கிலோ இறைச்சி எடை உள்ள ஆட்டின் விலை ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விலை போன நிலையில் நேற்று ரூ.10 ஆயிரம் வரை விலை போனது. ஒருபுறம் அதிக விலை என்றாலும் தீபாவளி பண்டிகை என்பதால் வேறு வழியின்றி விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளை வாங்கி சென்றனர். அதேபோல நாட்டுக்கோழி விற்பனையும் களை கட்டியது. புதுமண தம்பதிகளுக்கு ஆட்டு இறைச்சியை விட நாட்டுக்கோழிகளை சமைத்து போடுவது வழக்கம் என்பதால் நாட்டுக்கோழி விற்பனையும் அதிகளவில் நடந்தது.