ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது


ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது
x

Army recruitment camp has started

வேலூர்

காட்பாடி

காட்பாடி விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது. முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி வரை காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

இதில், அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய் தொழில்நுட்பம் (பெண் ராணுவ காவல் பணி), உதவி செவிலியர், உதவிசெவிலியர் (கால்நடை), மதபோதகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆள்சேர்ப்பு முகாமில் எவ்வித தனிநபரையோ அல்லது முகவர்களையோ நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் சான்று

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் நேரில் சென்று சுயமான போலீஸ் சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அறிவித்திருந்தார்.

வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் நேற்று போலீஸ் நிலையங்களில் சான்றிதழ் கேட்டு குவிந்தனர்.

இதனால் போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் சான்றிதழ்

மேலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் போலீஸ் சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆன்லைனில் இளைஞர்கள் சுய உறுதிமொழி கொடுத்து புகைப்படம் மற்றும் ஆதார் அட்டைகளை இணைத்து விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கு சான்று அளிக்க 24 மணி நேரமும் பணியாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இளைஞர்கள் குவிந்தனர்

இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் நேற்று இரவு காட்பாடி வந்தனர்.

காட்பாடியில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு இரு சக்கர வாகனங்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் இளைஞர்கள் சென்றனர். இதனால் அந்த பகுதி நெரிசல் மிகுந்ததாக காணப்பட்டது.

விளையாட்டு மைதான பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முன்னேற்பாடு பணிகள்

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டது.

மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து ராணுவ வீரர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மைதானம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு ராணுவ வீரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது.

முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் போலீஸ் சுய சான்று பெறவில்லை.

அதனால் அவர்களை ராணுவஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள் நீண்ட நேரம் வெளியே நின்று கொண்டு இருந்தனர்.


Next Story