கால்நடை துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்
tராமநாதபுரம் அருகே கால்நடை துறை பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூரை சேர்ந்த விமல்கண்ணன் என்பவரின் மனைவி கவுரிசாந்தி (வயது 34). இவர் ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் வயலூர் கிராமத்தில் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு கணவரின் ஊரான ஆர்.காவனூருக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் சித்தி ஆர்.காவனூரை சேர்ந்த ராதா, மகன் கவிதரசன், மகள் நிசாந்தினி ஆகியோர் தங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தினை கேட்டுள்ளனர். அப்போது கவுரிசாந்தி தன்னிடம் தற்போது ரூ.50 ஆயிரம் மட்டும் உள்ளதாகவும் மீதியை பிறகு தருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராதா உள்ளிட்டோர் கவுரிசாந்தியை தாக்கி கீழே தள்ளி மிதித்து படுகாயப்படுத்தினார்களாம். கவுரிசாந்தி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.