வீடுகளில் ஒளி நிரப்ப விதவிதமான விளக்குகள்


வீடுகளில் ஒளி நிரப்ப விதவிதமான விளக்குகள்
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 4:56 PM GMT)

கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை

மானாமதுரை,

கார்த்திகை வந்தாலே, அந்த மாதம் முழுவதும் வீட்டுக்கு வெளியே விளக்கு வைக்கும் கலாசாரம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்காகவே வீட்டு வாசலுக்கு இருபுறமும் சுவரில் விளக்கு குழி அல்லது மாடக்குழி என்று அமைத்தார்கள். இப்போதும் நிறைய வீடுகளில் இந்த வசதி இருப்பதை பார்த்திருப்போம்.

மழைக்குரிய மாதம் கார்த்திகை என்பதால், பூச்சிகள் அதிகமாக பறக்கும். இரவு நேரத்தில் பூச்சிகளை கவர்ந்து இழுக்கவே இந்த தீபம் ஏற்றும் கலாசாரம் வந்திருக்க வேண்டும் என அறிவியல்பூர்வமாகவும் கூறுகிறார்கள்.

கந்தனுக்கு உகந்த மாதமான கார்த்திகை நாளை (17-ந் தேதி) பிறக்கிறது. அய்யப்ப பக்தர்களும் விரதம் தொடங்க இருக்கிறார்கள்.

தீப வழிபாடும் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் கார்த்திகையை விளக்கொளியாக்க பல வண்ணத்தில் விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு தயார் ஆகி உள்ளன.

குறிப்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தீப விளக்குகள் தயாரிப்பு அதிகம் நடந்து வருகிறது. அங்கு பிரதான தொழில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. எனவே அங்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்... வாருங்கள்...

கார்த்திகை தீப விளக்குகள்

மானாமதுரை பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கலை நுணுக்கம் மிக்க மண்பாண்ட பொருட்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு வகையான மண்பாண்ட பொருட்களையும் செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது இல்லங்களை ஒளியால் நிரப்ப 3, 9, 12 அங்குலம் மற்றும் 1 அடி உயரம் வரையிலான விளக்குகள் தயார் ஆகி உள்ளன. மண் குத்துவிளக்கு, அகல் விளக்கு, சுட்டி, தட்டு விளக்கு, சரவிளக்கு, 3 அடுக்கு கொண்ட விளக்குகள், 5 முகம் கொண்ட விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவம் கொண்ட விளக்குகள், அலாவூதீன் விளக்குகள் என பல்வேறு வகையான விளக்குகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

தொடர் மழையால் பாதிப்பு

ரெங்கசாமி:- கொரோனா உள்ளிட்ட காரணங்களால் மானாமதுரையில் மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தற்போது வெறும் 30 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த தொழிலை செய்து வருகிறோம். ஆண்டுதோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் விளக்குகளை தயார் செய்து விற்பனைக்காக கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைப்போம். இந்தாண்டு கார்த்திகை தீப திருநாளையொட்டி பல்வேறு வகையான பேன்சி ரக விளக்குகளை தயாரித்து வருகிறோம். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்வதால் தயாரிக்கப்பட்ட விளக்குகளை காய வைக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம்.

கனகுமெய்யப்பன்:- கார்த்திகை தீப விழாவிற்காக 2 மாதத்திற்கு முன்னதாகவே அகல் விளக்குகள் தயாரிப்பு பணியை தொடங்கி விடுவோம். ஆனால் இந்தாண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் விளக்குகள் செய்வதற்காக கண்மாயில் மண் அள்ள முடியவில்லை. மேலும் தொடர் மழையால் தற்போது செய்துள்ள மண்பாண்டங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் அவற்றை காய வைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். இதற்கு முந்தைய காலத்தை போன்று இந்த தொழிலில் ஈடுபட போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் பன்றிகள் நாங்கள் செய்த மண்பாண்ட பொருட்களை சேதப்படுத்துவதால் பல வகையில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது உள்ளது.

வர்ணம் பூசும் பணி

ஜெயலெட்சுமி (அகல் விளக்குகளுக்கு வர்ணம் பூசுபவர்):- இங்கு தயார் செய்யும் பொருட்களை மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனைக்கு கொடுத்து வருகிறோம். தற்போது கார்த்திகை திருவிழா தொடங்கியதையடுத்து பல்வேறு வகையான தீப விளக்குகள் தயாரித்து அதற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு தரும் ஆதரவினால் அந்த சிரமங்கள் பெரிதாக தெரிவதில்லை. அடுத்து பொங்கல் விழாவும் வர உள்ளதால் பொங்கல் பானைகள் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story