பால்விலை, மின்கட்டணத்தை குறைக்கும் வரை பா.ஜனதா போராடும்-ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கதிரவன் பேச்சு
பால்விலை, மின்கட்டணத்தை குறைக்கும் வரை பா.ஜனதா போராடும் என ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கதிரவன் கூறினார்.
பனைக்குளம்,
பால்விலை, மின்கட்டணத்தை குறைக்கும் வரை பா.ஜனதா போராடும் என ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கதிரவன் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு பால் விலை, மின்கட்டணம், சொத்து வரிகளை உயர்த்தியது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜனதா சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமை தாங்கினார்.
இதில் பா.ஜனதா முக்கிய பிரமுகரும், உயர்நீதிமன்ற வக்கீலான சண்முகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட துணைத்தலைவர் அழகர், ஓ.பி.சி. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் தவமணி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், தரவு தளம் மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன், ஒன்றிய பொதுச்செயலாளர் கோபால், ஒன்றிய பொருளாளர் ஜோதி மற்றும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த முருகானந்தம், கோபி, தீபக், பூவேந்திரன், கண்ணன், கார்த்தி, பிரித்திவிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் விக்ராந்த் சந்துரு செய்திருந்தார்.
பா.ஜனதா போராடும்
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் கதிரவன் பேசும் போது,
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழக மக்களின் நலனில் முழு கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். பொதுமக்களுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை குறைக்கும் வரை பா.ஜனதா தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலாடி
கடலாடியில் பா.ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி பா.ஜ.க வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட செயலாளர் வெற்றிமாலை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட தலைவர் கதிரவன், பொதுச்செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, கடலாடி நகர தலைவர் மும்மூர்த்தி, ஒன்றிய பொதுச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நித்தியானந்தம் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்றனர். கமுதியிலும் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.