ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு


ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Resistance to eviction of squatter houses

தேனி

ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, மயிலாடும்பாறை கிராமத்தில் தனியார் நிலத்தின் ஒரு பகுதியில் ஆக்கிரமித்து 4 வீடுகள் கட்டியுள்ளதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தனியார் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் அதற்கு பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மயிலாடும்பாறை கிராம கமிட்டியினரும், வருவாய்த்துறை அதிகாரி மற்றும் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனக்கூறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தொடங்கினர்.

தற்கொலை முயற்சி

பலத்த எதிர்ப்புக்கு இடையே 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. கடைசியாக பார்வையற்ற தம்பதிகளான ஜெயபால்-நிர்மலா என்பவர்களின் வீட்டை இடிக்க வந்தனர். அவர்கள் தங்கள் வீட்டை இடித்து விட்டால் தங்குவதற்கு வேறு இடம் இல்லை எனவும், காலி செய்ய சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு போலீசாரிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மயிலாடும்பாறை கிராம மக்களும் பார்வைற்ற தம்பதிகள் மீது கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் அவர்களுக்கு ஆதரவாக பார்வையற்றவர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்து ஜெயபால், நிர்மலா அவர்களது 15 வயது மகள் ஜனனி ஆகியோர் திடீரென வீட்டிற்குள் சென்று விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனைக்கண்ட போலீசார் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பார்வையற்ற தம்பதியினர் வீடும் இடித்து அகற்றப்பட்டது. அந்த வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story