மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பெண் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்
தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி மாலைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி பத்மா (வயது 37). விவசாய கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலை 5 மணியளவில் குச்சிபொம்மை நாயக்கம்பட்டியில் இருந்து தங்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல் தமிழ்நாடு காகித ஆலையில் பணிபுரிந்து வரும் தங்கபாண்டி (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குச்சிபொம்மை நாயக்கம்பட்டியில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
பெண் பலி
இந்த விபத்தில் பத்மா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ், தங்கபாண்டி ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, பலியான பத்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.