ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்


ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 15 Nov 2022 7:24 PM GMT (Updated: 15 Nov 2022 8:32 PM GMT)

குற்றங்களை தடுக்க ஸ்மார்ட் காவலர் செயலியை போலீஸ் சூப்பிரண்டு பகவலன் அறிமுகம் செய்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி

தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவீனமயமாக்க ஸ்மார்ட் காவலர் செயலியை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகவவன் அறிமுகப்படுத்தினார்.

இதில் நவீனமயமாக்கப்பட்ட புதிய இ-பீட் செயலியும் அடங்கும். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் காவலர் ஸ்மார்ட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இரவு மற்றும் பகலில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், ஸ்மார்ட் காவலர் ஆப் மொபைல் செயலியில் பழைய குற்றவாளிகளின் விவரங்கள், ஏ.டி.எம், வங்கி, பூட்டிய வீடுகள் பற்றிய விவரம் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

கண்காணிப்பு பணி

எனவே வீடுகளில் தனியாக வசித்து வருவோர், முதியோர்கள் வீடுகள், பூட்டிய வீடுகள் குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் ரோந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். மேலும் ரோந்து செல்லும் போலீசாருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் செல்போன் வாயிலாக குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story