பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
x

Increase in crimes against women and children

திருச்சி

தேசிய குற்ற ஆவண காப்பகம்

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,377 வழக்குகளும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 1,788 வழக்குகளில் சிறார்கள் தொடர்பு உள்ளது. 1,076 சைபர்கிரைம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

மாவட்ட வாரியாக அறிக்கை

இந்தநிலையில் தற்போது, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே போலீஸ் ஆகியவற்றில் கடந்த 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 144 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 96 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 86 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 258 வழக்குகளும், திருச்சி மாநகரில் 104 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் அதிகரிப்பு

அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 67 வழக்குகளும், கரூரில் 85 வழக்குகளும், பெரம்பலூரில் 60 வழக்குகளும், புதுக்கோட்டையில் 212 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 214 வழக்குகளும், திருச்சி மாநகரில் 87 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூரில் 121 வழக்குகளும், கரூரில் 149 வழக்குகளும், பெரம்பலூரில் 81 வழக்குகளும், புதுக்கோட்டையில் 74 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 126 வழக்குகளும், திருச்சி மாநகரில் 78 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 49 வழக்குகளும், கரூரில் 33 வழக்குகளும், பெரம்பலூரில் 69 வழக்குகளும், புதுக்கோட்டையில் 56 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 158 வழக்குகளும், திருச்சி மாநகரில் 46 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.


Next Story