ஈரோடு அரசு விளையாட்டு விடுதி கைப்பந்து வீராங்கனைக்கு பாராட்டு
ஸ்போர்ட்ஸ்
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரசு மாணவியர் விளையாட்டு விடுதி உள்ளது. இங்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து (வாலிபால்), கூடைப்பந்து, நீச்சல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இங்கு கைப்பந்து பயிற்சி பெறும் வீராங்கனை விஷ்ணுஸ்ரீ, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் இமாச்சலபிரதேசத்தில் நடந்த 19 வயதுக்கு உள்பட்டோர் தேசிய கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. ஈரோடு திரும்பிய அவருக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் அரசு மாணவியர் விளையாட்டு விடுதி மேலாளர் பொற்கொடி உடன் இருந்தார். இதுபோல் ஈரோடு மாவட்ட முதன்மை கல்விஅதிகாரி அய்யண்ணன், மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.