மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடக்கம்


மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வாங்கப்பட்ட குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வாங்கப்பட்ட குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ஸ்டேன்மோர் எஸ்டேட் செல்லும் சாலையில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் இருந்து துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக் கிடங்கில் உள்ள மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டி வைக்கப்படுகிறது.

பின்னர் தரம் பிரிக்கும் தொட்டிகளில் மக்கும் குப்பைகள் மட்டும் சேகரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் சமவெளிப் பகுதியில் இருக்கும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

உரம் தயாரிக்கும் பணி

இதையடுத்து தரம் பிரிக்கும் தொட்டிகளில் சேமித்து வைத்துள்ள மக்கும் குப்பைகளில் இருந்து கழிவுநீரை வடிய செய்த பின்னர் வெயிலில் காய வைக்கப்படுகிறது. பின்னர் நன்றாக காய்ந்த குப்பைகள் உரம் தயாரிக்கும் எந்திரத்தில் போட்டு அறைக்கப்படுகிறது. அறைக்கப்பட்ட குப்பைகளை ஜல்லடையில் ஜலித்து எடுத்து உரமாக சேகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் கூறியதாவது:-

வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் உரம் தயாரிக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த உரங்கள் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் வீடுகளில் இருக்கும் வீட்டு தோட்டத்தில் பயன்படுத்த இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர சமவெளி பகுதியில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் பேசி வருகிறோம். தனியார் நிறுவனங்கள் முழுமையாக உரங்களை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் உரங்கள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.

சோதனை செய்ய வேண்டும்

வால்பாறை சார்பில் தயாரிக்கப்படும் இந்த உரங்களை தேயிலை செடிகளுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தினர் சோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உரங்களை சமவெளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பதற்கு பதிலாக வால்பாறை பகுதியிலேயே விற்பனை செய்து கொள்ளமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story