பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
x

பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ரங்கப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல்

கிராம சபை கூட்டம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சத்ய கலா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ஸ்ரேயாசிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு ஊராட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இணைய வழி

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:-

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் உதவி மைய செயலி மூலம் இணையவழியில் இணைத்துக் கொள்ளலாம். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

அதைத்தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நல துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.1.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

முன்னதாக தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் உறுதி மொழியை கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி கலெக்டர் மஞ்சுளா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், துணை இயக்குனர் (தோட்டக்கலை) கணேசன், துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story