ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சங்க மாநில செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் சவுந்தர்ராஜன், அமைப்பு செயலாளர் குமரவேல், போராட்டக்குழு தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களுக்கு ஒரேபதிவில் அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு 4ஜி சிம்கார்டு வழங்க வேண்டும். பதிவாளர் சுற்றறிக்கையின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்க வேண்டும், மகளிர் சுயஉதவிக்குழு நியாயவிலைக்கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.