ஈரோட்டில் பரபரப்புசீமானை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்;நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்துக்கும் எதிர்ப்பு
சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சர்ச்சை பேச்சு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்தார். அவர் கடந்த 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் சமூகநீதி மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் புகார் மனு அளித்து உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றனர். அவர்களை அங்கிருந்த மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகராறில் நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்டனர். அதில் அன்பு தென்னரசு என்பவர் படுகாயம் அடைந்தார்.
சாலை மறியல்
இந்தநிலையில் ராஜாஜிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஈரோடு திருநகர்காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மீண்டும் நேற்று வாக்கு சேகரிப்பதற்காக அங்கு சென்றார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஏற்கனவே பிரச்சினை நடந்து இருப்பதால் தேர்தல் பிரசாரத்தை மற்றொரு நாளில் வைத்து கொள்ள போலீசார் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றார்கள்.
பிரசாரத்துக்கு எதிர்ப்பு
இதேபோல் ஈரோடு பழைய பூந்துறைரோடு ஓடைப்பள்ளம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலை ஓட்டு சேகரிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையிலான கட்சியினரும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நாம் தமிழர் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினார்கள்.
அவர்களிடம் சீமான் பேசிய அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வரை நாம் தமிழர் கட்சியினரை வாக்குகள் சேகரிக்க உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.