கரையான் திடல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்


கரையான் திடல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்
x

குடவாசல் தாலுகா விஷ்ணுபுரம் ஊராட்சி கரையான் திடல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


குடவாசல் தாலுகா விஷ்ணுபுரம் ஊராட்சி கரையான் திடல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 215 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து, குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது குடவாசல் தாலுகா விஷ்ணுபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கரையான் திடல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் கணபதி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், அனைத்து மக்கள் நீதி கட்சி தலைவர் பாட்ஷா, நாட்டாண்மை குமார் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கூலி தொழிலாளிகளாகிய நாங்கள் மேற்கண்ட பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

அடிப்படை வசதி

நாங்கள் வசிக்கும் பகுதியில், மின்விளக்கு வசதி இல்லை, வீட்டிற்கு மின்சார இணைப்பு இல்லை, சாலை இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மேலும் எங்கள் பகுதிக்குள் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக கழிவறை வசதி இல்லாமல் பெண்கள், சிறுமிகள் அவதியடைந்து வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் படிப்பதற்கு கூட விளக்கு வசதிஇல்லை. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் லதா (சமூக பாதுகாப்பு திட்டம்), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story