பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்பு கொடுக்க தாமதம்
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்பு கொடுக்க தாமதமாகி வருகிறது.இதனால் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியை முழுமையாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீட்டு இணைப்பு கொடுக்க தாமதமாகி வருகிறது.இதனால் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியை முழுமையாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
பொள்ளாச்சியை முழு சுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நில அமைப்புபடி 5 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்களாக பிரித்து, அந்தந்த பகுதியில் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் நீர் உந்து நிலையங்கள் அமைத்து, நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.
இந்த கழிவுநீர், சந்தைபேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் விடப்படுகிறது.
பணியில் சிக்கல்
இந்த நிலையில் பாதாள சாக்கடை குழாயில், வீட்டு குழாய் இணைப்பு கொடுக்க தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக சுத்திகரிப்பு பணியை முழுமையாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 7,900 ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும் கழிவுநீர், நவீன தொழில்நுட்பம் மூலம் வடிகட்டப்படுகிறது. இதன் மூலம் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும். படிப்படியாக வடிகட்டி நவீன எந்திரத்தில் 4 மணி நேரம் இருப்பு வைத்து சுத்திகரிக்கப்படும். பின்னர் குளோரின் கலந்த மற்றொரு தொட்டிக்கு சுத்திகரித்த தண்ணீரை கொண்டு சென்று கிருமிகள் அழிக்கப்படும். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கலாம். குறைந்தது 35 சதவீத கழிவுநீர் வந்தால்தான், இந்த பணியை முழுமையாக மேற்கொள்ள முடியும். ஆனால் வீட்டு குழாய் இணைப்பு கொடுக்க தாமதமாவதால், 1.40 மில்லியன் லிட்டர் கழிவுநீர்தான் வருகிறது. இருப்பினும் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் வாகனங்கள்
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஆள்இறங்கு குழிகள் நிரம்பி வழிதல், அடைப்பு ஏற்படுதல், நீர்உந்து நிலையங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் சரியாக செயல்படாதது போன்ற காரணங்களால் வீட்டு குழாய் இணைப்பு கொடுக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர். மேலும் ஒப்பந்த நிறுவனத்துக்கு 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மற்றும் இயக்குதல் அனுமதி கொடுப்பதிலும் தாமதமானது. கடந்த மாதம் 1-ந் தேதியிட்டுதான் அனுமதி வழங்கி உள்ளனர்.
தற்போது கூடுதலாக ஆட்கள், வாகனங்களை அமர்த்தி பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டு குழாய் இணைப்பு கொடுக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் வீட்டு இணைப்பு கொடுக்க வேண்டும். தற்போது வரை 7,926 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.