திருப்பூர் துரைசாமி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை -வைகோ பேட்டி


திருப்பூர் துரைசாமி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை -வைகோ பேட்டி
x

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி வைகோ மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று வைகோ தெரிவித்தார்.

சென்னை,

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி, கட்சியின் வாழ்நாள் உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளிலும் இருந்தும் விலகுவதாக கட்சி பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் வைகோ மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர் கூறியிருந்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வைகோ நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி வைக்கக்கூடாது

தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயற்சி நடந்தபோது, திருப்பூர் துரைசாமி கூட்டணி வைக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார். தி.மு.க. வெற்றி பெறாது என்று கூறினார். கட்சியின் கூட்டத்திலேயே இதை பேசினார். ஆனால் மற்றவர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.

தி.மு.க.வுடன் உடன்பாடு எப்போதும் கூடாது என்று துரைசாமி திட்டவட்டமாக கூறிவந்தார். இப்போது தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் வெளியே வந்துவிட்டேன் என்று அவர் கூறுகிறார். அன்று சொன்னதற்கு நேர்மாறாக இன்று நடந்து கொள்கிறார். இப்படிப்பட்ட நிலையில், தி.மு.க.வுடன் நாங்கள் உடன்பாடு வைத்தோம். இது அவருக்கு பிடிக்கவில்லை. தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் என்றும் பலரிடம் சொல்லியுள்ளார். தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியும் பெற்றது.

கடும் விமர்சனம்

இதேபோல், நான் 2 ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், கொரோனா காலத்திலும் அரசியல் மனிதாபிமானத்தோடு, கட்சியினர் துரை வைகோவை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க செய்தனர். துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவரிடமும் சொல்லியிருந்தேன். எனக்கு தெரியாமலேயே ம.தி.மு.க. நிகழ்ச்சிகளில் துரை வைகோவை கட்சியினர் அழைத்து சென்றார்கள்.

கட்சியினர் எல்லோரும் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்து பேசினேன். கண்டிப்பாக வரவேண்டும் என்று அவர்கள் பேசினர். பெரும்பான்மையை மறுக்கக்கூடாது என்று துரை வைகோ அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது தொடர்பான ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அதிலும் ஓரிருவரை தவிர, பெரும்பாலானோர் வர வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில் துரை வைகோ கட்சி பணியை ஆரம்பித்தார். இதை தாங்க முடியாமல் திருப்பூர் துரைசாமி கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

குற்றச்சாட்டில் உண்மை இல்லை

என் மீது குற்றச்சாட்டுகளை துரைசாமி வைக்க ஆரம்பித்தார். கட்சியின் வரவு-செலவை ஆண்டுதோறும் தணிக்கை செய்து, வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கிறோம். கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உயிரை பணயமாக வைத்து பாடுபட்டு வந்திருக்கிறேன். ஆகவே ம.தி.மு.க.வின் வளர்ச்சியிலே ஈடுபட்டு அதற்காக பாடுபட்டு வந்திருக்கும் சூழலில், திருப்பூர் துரைசாமி என்னுடன் பயணித்ததற்கு நன்றி. ஆனால் அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலாளர் வந்தியதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story