மாவட்ட அளவிலான கவிதை, பேச்சுப்போட்டிகள்


மாவட்ட அளவிலான கவிதை, பேச்சுப்போட்டிகள்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

மாவட்ட அளவிலான கவிதை, பேச்சுப்போட்டிகள் கடலூரில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

விழுப்புரம்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 6-ந் தேதி காலை 9 மணியளவில் கடலூர் கடற்கரைச் சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சி.கே. செயல்முறை கற்பித்தல் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

மாணவர்கள் பயன்பெறலாம்

இந்த கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே பரிசு வழங்கப்பட உள்ளன. இப்போட்டிக்கு மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுள் ஒரு பள்ளியில் இருந்து, ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மொத்தம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவுசெய்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனுப்பவேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையை பதிவு செய்யவேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள், போட்டி நடைபெறும் அரங்கில் அளிக்கப்பெறும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் (பதின்ம) மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழில் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story