திண்டிவனம் நகராட்சியை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்
திண்டிவனம் நகராட்சியை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம்:
திண்டிவனத்தில் வரி வசூல் செய்யப்பட்ட ரூ.9 கோடியை நகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் செயல்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் எதிரே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்.எஸ்.பிள்ளைவீதி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்த பா.ம.க.வினர் திண்டிவனம் நகரில் வரி வசூல் செய்த 9 கோடி ரூபாய்க்கான வரவு, செலவு கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், திண்டிவனத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமானம் தரமானதாக நடைபெறவில்லை. 33 வார்டுகளிலும் அள்ளப்படும் குப்பைகள், ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட 15 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், வரியை குறைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் நகராட்சி அலுவலகத்தை பூட்டுபோடுவோம் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் பொன் மகேஸ்வரி, பா.ம.க. கவுன்சிலர்கள் ஹேமாமாலினி, மணிகண்டன், நிர்வாகிகள் ஜெயராமன், பூதேரி ரவி, சவுந்தர், சலவாதி சேகர், ஏப்பாக்கம் குமார், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து நகராட்சி மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.