கொப்பரை விலை தொடர் வீழ்ச்சி


கொப்பரை விலை தொடர் வீழ்ச்சி
x
தினத்தந்தி 3 July 2023 2:45 AM IST (Updated: 3 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொப்பரை விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து, வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை கூடங்களில் வாங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கொப்பரை விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து, வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை கூடங்களில் வாங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொப்பரை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் ஆகிய வெளிமார்க்கெட்டில் கொள்முதல் விலை குறைவாக இருந்ததால், சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் செஞ்சேரி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது கொப்பரையை விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர்.

கொள்முதல் நிறுத்தம்

இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 29-ந் தேதி வரை 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டியதால், கொப்பரை வாங்குவது நிறுத்தப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் கொப்பரை வாங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. உற்பத்தி அதிகரித்து இருந்தும் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மீண்டும் வாங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வெளிமார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.73-க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தற்போது ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் தோப்புகளில் தரமான ஒரு தேங்காய் ரூ.8 முதல் ரூ.9 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

ஏற்கனவே தென்னந்தோப்பு பராமரிப்பு செலவு, உர செலவு உள்ளிட்டவை அதிகரித்து உள்ள நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதல் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே அரசு கொள்முதல் நிலையங்களில் மீண்டும் கொப்பரை வாங்க வேண்டும். கிலோவுக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story