ஜவுளி அனுப்புவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி- கோவையை சேர்ந்த தம்பதி மீது வழக்கு
ஜவுளி அனுப்புவதாக கூறி மும்பை தொழில் அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கோவை தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜவுளி அனுப்புவதாக கூறி மும்பை தொழில் அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த கோவை தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
மும்பையை சேர்ந்தவர் பசந்த் சோனி. தொழில் அதிபர். இவர் மும்பையில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கோவையை சேர்ந்த மனோகரன் (வயது 50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மனோகரன் கோவையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பசந்த் சோனியும், மனோரகனுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஜவுளி வியாபாரம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பசந்த் சோனி, மனோகரனை தொடர்பு கொண்டு தனக்கு ஜவுளி அனுப்பி வைக்கும்படி தெரிவித்து உள்ளார். இதற்கு மனோகரன் முன் பணம் செலுத்தினால் ஜவுளி அனுப்பி வைப்பதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பசந்த் சோனி பல்வேறு தவணை காலமாக ரூ.1 கோடியே 86 லட்சத்து 62 ஆயிரத்தை மனோகரனின் வங்கி கணக்கு மற்றும் அவரது மனைவி சிவகாமி ஆகியோரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
மோசடி
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட மனோகரன், அவர் கூறியப்படி ஜவுளிகளை அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக பசந்த் சோனி, மனோகரனிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தனது பணத்தை திருப்பி தரும்படி மனோகரனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசந்த் சோனி கோவை பீளமேடு போலீசில் பண மோசடி தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மனோகரன் மற்றும் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.