கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில் விவசாயிகளுக்கு வழங்க 15 ஆயிரம் நாற்றுகள் தயார்
கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில் 15 ஆயிரம் சோலை மற்றும் சில்வர் ஓக் மர நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய நர்சரி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில் 15 ஆயிரம் சோலை மற்றும் சில்வர் ஓக் மர நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய நர்சரி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
லாங்வுட் சோலை
கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக் காடுகள் கொண்ட வனப்பகுதியாகும். இந்த சோலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சோலையில் உள்ள சதுப்பு நிலங்கள் தேக்கி வைக்கும் தண்ணீர் சுமார் 25 கிராமங்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக அறிவிக்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின் 'குயின்ஸ் கனோபி' என்ற இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும். இந்த சோலை பசுமைக் காடுகள், நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள் நிறைந்த பகுதியாகவும், அரிய வகை தாவரங்கள், செடிகள், மரங்கள் உள்ள பகுதியாகவும், அரிய பறவைகள் மற்றும் வன விலங்குகளின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதியை சுற்றுச் சூழல் மண்டலமாக அறிவித்து, லாங்வுட் சோலையைப் பாதுகாக்கவும், அங்கு பல்லுயிர் சூழல் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
15 ஆயிரம் மர நாற்றுகள்
இந்த சோலையில் சோலை மர நாற்றுகள் தயார் செய்யப்பட்டு மாநில அரசின் மரம் நடும் திட்டத்திற்கும், வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள், வனப்பகுதியில் உள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றி சோலை மரங்களை நடுவதற்கும், பள்ளிகள், சாலையோரங்களில் மர நாற்றுகளை நடுவதற்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக வளர்க்கும் விதமாக சில்வர் ஓக் மர நாற்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யபட்டு வருகின்றன. தற்போது இந்த நர்சரியில் மொத்தம் 15 ஆயிரம் மர நாற்றுகள் தயார் செய்யபட்டு விநியோகம் செய்யவும், லாங் வுட் சோலை வனப்பகுதிக்குள் சோலை மர நாற்றுகள் நடவு செய்யவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் சூழல் ஆராய்ச்சி மையம்
இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் தெரிவிக்கையில், லாங்வுட் சோலை நர்சரியில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்களும், அந்நிய நாட்டு தாவரங்களுக்கு பதிலாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக நடுவதற்காக நாவல், விக்கி, கோலி, சிறு நாவல், பெருநாவல், லவங்கம், நிலா, கடலைமரம் உள்பட 20 வகைகளை சேர்ந்த 5 ஆயிரம் சோலை மர நாற்றுகளும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மேலும் லாங்வுட் சோலையில் புதிய நர்சரி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சோலைக்குள் சூழல் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் பேட்டரி வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பல்லுயிர் சூழல் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது என்றார்.